அதிவேக இணையதள சேவை.. .. விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் 11

கயானா: இந்தியாவின் அதிக எடைக் கொண்ட செயற்கைக்கோளான ஜிசாட் 11 இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் வெற்றிக்கரமாக நிலைநிறுத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காகவும், கடல் சார் ஆய்வுகளுக்காகவும் பல்வேறு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. அந்த வரிசையில் அதிவேக இணையதள சேவைகளை கொண்ட ஜிசாட் 11 என்ற செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.

இது கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-8 ராக்கெட் மூலம் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது.

மீண்டும் ஒரு முறை

இதையடுத்து, ஜூன் மாதத்தில் விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட்-11 செயற்கைக்கோளை தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து திரும்பப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்தனர்.

செயற்கைக்கோள்

பின்னர் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2.07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்துடன் தென்கொரியாவின் புவி ஆய்வு செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது.

அதிவேக டேட்டா

இந்த செயற்கைக்கோளின் எடை 5,854 கிலோ எடை கொண்டது. இஸ்ரோ தயாரித்த செயற்கைக்கோள்களிலேயே அதிக எடை கொண்டது இதுதான். இதன் மூலம் இந்தியாவிலும் அருகில் உள்ள தீவுகளிலும் இணையதள வேகம் அதிகரிக்கப்படும். வினாடிக்கு 16 ஜிகாபைட் என்ற வேகத்தில் டேட்டாவை வழங்கும்.

100 ஜிகாபைட்

இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும். இதில் 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்டன. செயற்கைக்கோள் ஏவுவதை பிரெஞ்ச் கயானாவில் இருந்து இஸ்ரோ தலைவர் சிவன் நேரில் பார்வையிட்டார். அடுத்த ஆண்டில் ஜிசாட் 20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ள இது வினாடிக்கு 100 ஜிகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்கும் என்றார் சிவன்.

வாழ்த்து

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியில் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்ரோ தலைவர் சிவனும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.