அடப்பாவத்த ஏர்டெல்லும் இப்படி போய் சிக்கிகுச்சே எல்லாமே இப்படி பண்ணா மக்கள் எங்க போவாங்க.

ஏர்டெல் நிறுவனம், பணம் வழங்கும் வங்கி சேவையையும் (Payment Bank) நடத்தி வருகிறது. செல்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்காக வாடிக்கையாளர்கள் செல்லும் போது, அதற்கான நடைமுறையுடன் சேர்த்து, பணம் வழங்கும் வங்கி சேவைக் கணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகளையும் ஏர்டெல் நிறுவனம் செய்கிறது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பெயரில் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு விடுகிறது. ஆதாரும் அதனுடன் இணைக்கப்படுகிறது.

ஆதார் தொடங்கப்பட்டதன் நோக்கம் மக்களுக்கு அடையாளம் வழங்குவது தான் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், அரசின் நலத்திட்டங்களும், மானியங்களும் பயனாளிகளுக்கு செல்வதையும், அதற்காக பயனாளிகளை அடையாளம் காட்டுவதற்கான கருவியாகவும் தான் ஆதார் பயன்படுகிறது. ஆதார் மூலம் அரசின் பயன்களை நேரடியாக வழங்கும் நடைமுறையில் வினோதமான நடைமுறை ஒன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, ஒரு வாடிக்கையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் நிலையில், அவரது ஆதார் கடைசியாக எந்த வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறதோ, அந்தக் கணக்கில் தான் அரசின் மானியங்கள் வரவு வைக்கப்படுகின்றன.

ஏர்டெல் செல்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்கப்படும் போது, அந்நிறுவனத்தின் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல், அவர்களின் செல்பேசி எண்ணில் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கையும் தொடங்கி, ஆதாருடன் இணைத்து விடுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் சமையல் எரிவாயுக்கான மானியம் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் பணத்தை ஏர்டெல் சேவைக்கான கட்டணம் செலுத்தவோ அல்லது வேறு தேவைகளுக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தவோ மட்டும் தான் பயன்படுத்த முடியும். அதை பணமாக எடுத்து செலவழிக்க முடியாது. இது கூட பணம் வழங்கும் வங்கிச் சேவை பற்றி அறிந்தவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.

பாமரர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு தெரியாமல் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அரசின் மானியம் அந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த தகவல் கூட அவர்களுக்கு தெரியாது.

இன்றைய நிலையில் இந்தியாவில் 27.65 கோடி பேர் ஏர்டெல் இணைப்புகளை பெற்றுள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 2.75 கோடி பேர் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு, ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.1000 மானியம் வரவு வைக்கப்பட்டிருப்பதாகக் கொண்டால் ரூ.2750 கோடி பணம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த பணம் சம்பந்தப்பட்ட மக்களுக்கு திரும்பக் கிடைக்குமா? என்பது ஒருபுறமிருக்க, ரூ.100க்கும், ரூ.200க்கும் கூட வழியற்ற கோடிக்கணக்கான மக்களின் மானியத்தை ஒரு தனியார் நிறுவனம் முறைகேடான வழியில் பறித்து வைத்திருக்கிறது.

இந்த முறைகேடு குறித்து இந்தியாவில் முதல்முறையாக கடந்த வருடத்தில் பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் இது தொடர்பான தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் ஏர்டெல் நிறுவனத்தின் மீது வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர் தற்குறிப்பு விவரங்கள் எதுவுமின்றி, விதிமுறைகளை மீறி வங்கி கணக்குகளை தொடங்கி முறைகேடு செய்த ஏர்டெல் பேமென்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர் தற்குறிப்பு விவரங்களை சேகரிக்கால், வெறும் ஆதாரை மட்டுமே வைத்து வங்கி கணக்கு தொடங்கியதை கண்டறிந்த ரிசர்வ் வங்கி, ஏர்டெல் பேமென்ட் வங்கிக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதேபோன்று ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாது செயல்பட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு 40 லட்சம் ரூபாயும், ஆக்சிஸ் வங்கிக்கு 3 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 2 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.