பிரச்சினைகளில் இருந்து தப்ப ஜியோ ஏர்டெல் உதவியை கேட்கிறது ஏர்செல்

சென்னை: ஏர்செல் நிறுவன சொத்துக்களை வாங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏர்செல் நிறுவனம் தற்போது 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடனில் மூழ்கி விட்டது. இதனால் கடந்த பல நாட்களாக ஏர்செல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தங்களை திவால் ஆன நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனு செய்துள்ளது.

இந்த நிலையில், ஜியோ நிறுவனம் ஏர்செல் சொத்துக்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த டிசம்பரில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன சொத்துக்களை ஜியோ இப்படித்தான் வாங்கியது. இதன்மூலம், ஏர்செல் தொடர்ந்து இயங்க ஓரளவுக்கு வாய்ப்பு ஏற்படலாம்.

அதேபோல ஏர்டெல் நிறுவனம், ஏர்செல் சேவையில் இணைந்து செயலாற்றி வாடிக்கையாளர்களுக்கு தொல்லை நேராமல் பார்த்துக்கொள்ள உள்ளது.

இதுகுறித்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை ஊடகங்கள் இமெயிலில் தொடர்புகொண்டு கேட்டதற்கு இன்னும் பதில் வழங்கவில்லை.

ஏர்செல் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து மற்றும் பங்குகளை கையகப்படுத்தி விற்றோ, அல்லது ஏலத்தில் விட்டோதான், ஓரளவுக்கு கடனை அடைக்க முடியும் என தெரிகிறது.