ஏர் செல் மட்டுமில்லை மொத்தம் 8 நிறுவனங்களின் கதை முடிந்தது

 சென்னை : தகவல் தொடர்பு துறையில் பிரபலமான ஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15ல் இருந்து செயல்படாது என்று டிராய் நிறுவனம் அறிவித்துள்ளது.தங்களது நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவிக்கும்படி டிராயிடம் கோரிக்கை வைத்திருந்தது ஏர்செல் நிறுவனம்.

கடந்த ஒருவருடமாக இழப்பை சந்தித்துவரும் ஏர்செல், கடன் சுமை அதிகமானதால் இப்படி அறிவிக்கும்படி கோரியுள்ளது.ஏர்செல்லின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

கடந்த வாரத்தில் சில தினங்கள் ஏர்செல் மொபைல் சர்வீஸ் பலருக்கு சிக்னல் கிடைக்காமல் செயல் இழந்தது.அப்போது ஏர்செல்லின் இத்தகைய பிரச்சனைக்கு ஜியோதான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் ஜியோ மொபைல் சேவை  அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே இதுபோன்ற விஷயங்கள் நடக்கும் என்று கணிக்கப்பட்டது. 

அந்த வகையில் தற்போது ஜியோவின் ஆதிக்கத்தால், சிறிது, பெரிது என மொத்தம் 12 மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்த நிலையில்,தற்போது 4 நிறுவனங்கள் மட்டுமே இருக்கிறது.

அவற்றில், ஏர்டெல்லும்,பிஎஸ்என்எல்-லும் நல்ல நிலையில் இருக்கிறது.இழப்பை சமாளிக்க வோடாபோன், ஐடியா இணைக்கப்பட்ட ஒரே பெயரில் செயல்பட உள்ளது.மீதம் இருப்பது ஜியோ மட்டும்தான். மற்ற நிறுவனங்கள் எல்லாம் சமாளிக்க முடியாமல் அதிகாரபூர்வமற்ற நிலையில் செயல்பாட்டை நிறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில்,கடந்த ஒரு வருடமாக ஏர்செல் நிறுவனம் மோசமான நஷ்டத்தில் இயங்கி வந்துள்ளது.மேலும், பல வாடிக்கையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தும் இருக்கிறது.இந்த சூழலில், சிக்னல் வழங்கும் நிறுவனங்களும் ஏர்செல்லுடன் பிரச்சனை செய்து இருக்கிறது.

இதனால், ஏர்செல் பங்குகளை அதிகமாக வைத்திருந்த மலேசியாவின் மேக்சிஸ் டெலிகாம் கோபம் அடைந்து இருக்கிறது.இதனால்,அந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுப்பதை நிறுத்தி இருக்கிறார்கள்.இதனால் நெருக்கடிக்கு ஆளான ஏர்செல்லுக்கு15,500 கோடி வரை தற்போது கடன் இருக்கிறது.

இதுகுறித்து ஏர்செல் அனுப்பி உள்ள திவால் கடிதத்தில், எங்களால் தொலைத்தொடர்பு சந்தையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. புதிய நிறுவனம் ஒன்றின் வருகையால் நாங்கள் அதிகப்படியான நஷ்டம் அடைந்து இருக்கிறோம் என்று ஜியோ பெயரை பற்றி சொல்லாமல் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறது.