ஜியோவை தூக்கிப்போட்டுட்டு வேற சிம் வாங்க போறீங்களா முதலில் இதைப் படிங்க

வாங்கடா வாங்க.! கிரீஸ் டப்பாவ எப்பிடிமிதிச்ச.?' என்ற நிலைப்பாட்டில் 'இருந்த' பெரும்பாலான ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் இந்தியா போன்ற டெலிகாம் நிறுவனங்களின் 'முன்னாள்' வெறுப்பாளர்களுக்கும், வர வர ஜியோ நெட்வார்ட் சரியே இல்ல.. பேசாமல் பழையபடி ஏர்டெல் அல்லது ஐடியாவிற்கே மாறிடலாம் போல என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் திடீர் பிரியர்களுக்கும் வணக்கம்.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவை பிடிக்காமல் போய், வேறொரு டெலிகாம் நிறுவனத்தின் சேவைக்குள் குதிப்பதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறீர்களா.? அதற்கு முன்னர் சமீபத்திய டிராய் அறிக்கையை ஒருமுறை படித்து விடவும். பின்னர் ஜியோவை விட்டு ஏன் வெளியேறவே கூடாதென்பதற்கான பல காரணங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

டிராய் (Telecom Regulatory Authority of India - Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

கடந்த 2017 நவம்பர் மாதத்தில், ஜியோவின் மொபைல் தரவு வேகம் (பதிவிறக்கம்) ஆனது 25.6 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது 2017 ஆண்டு காலண்டரில் அதிகபட்ச வேகமாகும் என்பதையும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. ஜியோவின் முந்தைய டேட்டா வேகப்பதிவுகளுடன் ஒப்பிடும் போது வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது.

இதற்கு முந்தைய தரவு வேகங்களை பொறுத்தமட்டில், அதாவது 2017-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 17.4 எம்பிபிஎஸ், 16.5 எம்பிபிஎஸ், 18.5 எம்பிபிஎஸ், 19.1 எம்பிபிஎஸ், 18.8 எம்பிபிஎஸ், 18.7 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 21.9 எம்பிபிஎஸ் மற்றும் 21.8 எம்பிபிஎஸ் என பதிவாகியுள்ளது.

 

மறுகையில் உள்ள ஜியோவின் பிரதான போட்டியாளரான பார்தி ஏர்டெல் நிறுவனமானது 9.8 எம்பிபிஎஸ் என்கிற அளவிலான வேகத்தை பதிவு செய்துள்ளது. ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் ஏர்டெல் மூலம் பதிவாகியுள்ள மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், ஏர்டெல் ஆனது முறையே 7.5 எம்பிபிஎஸ் மற்றும் 9.3 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்தது.

வோடபோன் இந்தியா நிறுவனமானதும் ஏர்டெல் நிறுவனத்தை பின்பற்றியது. நவம்பர் மாதம் அதன் செயல்திறனானது 10 எம்பிபிஎஸ் என்கிற புள்ளியை தொட்டது. அதற்கு முன்னர் அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 8.7எம்பிபிஎஸ் மற்றும் 9.9எம்பிபிஎஸ் என்கிற வேகத்தை பதிவு செய்தது.

இறுதியாக, ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் செயல்திறன் ஏமாற்றமளிக்கிறது என்றே கூறலாம். அதன் மொபைல் தரவு வேகம் ஏப்ரல் முதல் தொடர்ந்து சீர்குலைந்த வண்ணம் உள்ளது. இது நவம்பர் மாதத்தில் 7 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டின் மிக குறைவான வேகமாகும்.

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐடியா நிறுவனமானது 13.7எம்பிபிஎஸ், 11.7எம்பிபிஎஸ், 9.5 எம்பிபிஎஸ், 8.9 எம்பிபிஎஸ், 8.8 எம்பிபிஎஸ், 8.6 எம்பிபிஎஸ் மற்றும் 8.1 எம்பிபிஎஸ் என்று பதிவாகியது. ஆக ஐடியா செல்லுலார் நிறுவனமானது பின்னோக்கி பயணிப்பதை அறிய முடிகிறது.