பல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது

ஜகர்தா: இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 192 பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது

செய்துள்ளனர்.

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்ரா மாகாணத்தின் தலைநகர் மேடான். இங்குள்ள ஒரு வீட்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது 30 வயதுக்கு உட்பட்ட 192 வங்கதேசத்தினரை

போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். இது தொடப்பாக இந்தோனேஷியாவின் மேடான் நகர குடியுரிமை துறை அதிகாரி கூறுகையில், "பிடிபட்ட வங்க தேசத்தினர் அனைவரும் பல நாட்களாக உணவில்லாமல் பசியில் வாடியுள்ளனர்.

மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நோக்கத்துடன் இவர்கள் படகு வழியாக வந்திருக்கக்கூடும் என நினைக்கிறோம். ஏனெனில் இவர்களிடம் எந்த ஆவணங்களும் கிடையாது," என்றார். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் அந்நாட்டு அதிகாரிகள், பிடிபட்ட வங்கதேசத்தினரை நாடு கடத்துவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் சுமாத்ரா பகுதியில் படகு வழியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு இந்தோனேசியாவில் தஞ்சமடைவது வாடிக்கையாகி வருகிறது.