ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் அசத்தல் தீபாவளி கொண்டாட்டம்.. குடும்பமாக இணைந்து குதுகலம்

சிட்னி: ஆஸ்திரேலியவாழ் தமிழர்கள், தீபாவளி பண்டிகையை ஒன்றாக கூடி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுதொடர்பாக விழா அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: North Shore தமிழ் சங்கம் அமைப்பின் மூலம், சிட்னி ஆஸ்திரேலிய வாழ் தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து, தமிழால் இணைவோம், தமிழ் மொழி வளர்த்து மகிழ்வோம் என்ற தாரக வார்த்தைகளின் இலக்கணமாய், நவம்பர் 4ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, தீப ஒளி திருநாளை கொண்டாடினார்கள்.

இந்த விழாவில், சங்கத்தின் சார்பாக நித்யா, வரவேற்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து, ரேகா மற்றும், கணேஷ் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

குழந்தைகள் அனைவரும், தாம் பயின்ற ஆத்திச்சூடி, பாரதியார் கவிதை மற்றும் திருக்குறளை மேடையில் அழகான செந்தமிழில் சொல்லி, வந்திருந்தவர்களை மகிழ்வித்தனர். சிட்னி தமிழ் பள்ளியின், தலைமை முதல்வர், மூர்த்தி, திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடிக்கு விளக்கம் அளித்து, குழந்தைகளை வழிநடத்தினார்.

இதன்பிறகு, ஒவ்வொரு குடும்பமாக மேடையில் வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர், அனைவரும் ஒன்றாக அமர்ந்து, ஒரே குடும்பம் போல, தீபாவளி விருந்தினை உண்டு மகிழ்ந்தார்கள். இதன்பிறகு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் தங்கள் இனிமையான பாடல்களால் மற்றும் அருமையான நடனங்களால், அனைவரையும் மகிழ்வித்தனர். குடும்ப தலைவிகளுக்காக, மியூசிக்கல் சேர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழாவிற்கு வருகை தந்த, பெரியவர்களுக்கு, சங்கத்தின் தலைவர்கள் மரியாதை அளித்து, குழந்தைகளுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்க வைத்தனர். பின்னர், சங்கத்தின் சார்பாக பிரபா, North Shore தமிழ் சங்கத்தின், குறிக்கோள்களை அனைவருக்கும் எடுத்துரைத்தார். இறுதியாக, வனிதா, நன்றியுரையாற்றினார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், தமிழ் மொழியை, ஒரு பாடமாக எடுத்து படிக்க அனுமதி வழங்கியுள்ள தருணத்தில், இந்த அமைப்பின் மூலமாக குழந்தைகளின் தமிழ் ஆர்வம் வளர்த்தெடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.