டிரம்ப்பை நடுங்க வைக்கும் அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தல்.. ஏன் இந்த தேர்தல்? இந்தியாவிற்கு என்ன பயன்?

அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தல் உலக அரசியலில் பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தல் உலக அரசியலில் பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது.

அந்நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் மட்டும் மாற்றமும் செய்யாமல், உலக நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள கொள்கை தொடர்பான விஷயங்களிலும் இந்த தேர்தல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இன்றும் பல மாகாணங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

என்ன முறை

அமெரிக்காவில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்கள் என்ற இரண்டு பலம் வாய்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மொத்தம் 100 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். அதேபோல் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்கள் 435 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள்.

இப்போது தேர்தல் நடக்கிறது

இவர்களுக்குத்தான் இப்போது தேர்தல் நடக்கிறது. ஆனால் அனைத்து செனட் சபை உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கவில்லை. 100 பேரில் 35 இடங்களுக்குத்தான் தேர்தல் நடக்கிறது. 435 பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கிறது. அதேபோல் 36 கவர்னர்கள் இந்த வருடம் தேர்வு செய்யப்படுவார்கள். எப்போதும் இந்த தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து 2 வருடத்தில் நடக்கும். 2017 ஜனவரியில் டிரம்ப் அதிபராக தேர்வானர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் யார்

இந்த தேர்தலில் நிறைய கட்சிகள் போட்டியிடுகிறது. ஆனால் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும்தான் இதில் முக்கிய வேட்பாளராக இருக்கிறது. இன்னும் நிறைய முக்கிய சுயேச்சை உறுப்பினர்களும் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்கள்.

என்ன நடக்கும்

இந்த தேர்தல் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. அமெரிக்காவில் எந்த சட்ட திருத்தம் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதற்கு இந்த இரண்டு சபைகளிலும் அனுமதி வாங்க வேண்டும். இந்தியாவில் நாடாளுமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் ஒரு சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வாங்குவது போல. இப்போது அந்த உறுப்பினர்களுக்குத்தான் தேர்தல் நடக்கிறது. இந்த அவையில் மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே திட்டங்களை அமல்படுத்த முடியும்.

முடிவுகள் எப்படி வரலாம்

இதில் முடிவுகள் மூன்று விதமான வெளியாகலாம்.

1. டிரம்ப்பின் குடியரசுக் கட்சி இரண்டு உறுப்பினர்கள் அவையிலும் அதிக இடங்களில் வெற்றி பெறலாம். அப்படி நடக்கும்பட்சத்தில் டிரம்ப் தனது திட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும்.

2. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி இரண்டு உறுப்பினர்கள் அவையிலும் அதிக இடங்களில் வெற்றி பெறலாம். அப்படி நடக்கும்பட்சத்தில் டிரம்ப் எந்த திட்டங்களையும் எளிதாக நிறைவேற்ற முடியாது.

3. இரண்டு கட்சிகளும், இரண்டு அவையிலும் சமமான பலத்தை பெறலாம். அப்படி நடந்தால், ஓவ்வொரு திட்டத்திற்கும் முன்னதாக உறுப்பினர்களும் கட்சிகளும் தங்களுக்குள் ஏதாவது ஒப்பந்தம் செய்து சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே டிரம்பிற்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா என்ன பயன்

இந்த தேர்தலால் இந்தியாவிற்கு நிறைய பயன் உள்ளது. இதில் டிரம்ப்பின் கட்சி தோற்கும்பட்சத்தில் அவர் அமெரிக்காவின் விசா நடைமுறையில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் விஷயங்களை அமல்படுத்த முடியாது. இதன் மூலம் விசா கிடைக்காமல் கஷ்டப்பட்டு வரும் இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்கா செல்வதும், அங்கு வேலை பெறுவதும் எளிதாகும்.