இப்பத்தான் கீகீ ஓய்ந்தது.. அதுக்குள்ள அடுத்த ஆட்டமா.. போதுமய்யா விட்ருங்கய்யா!

பணக்காரர்கள் விளையாடும் ஃபாலிங் டவுன் விளையாட்டு வைரலாகி வருகிறது.

ஷாங்காய்: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பஞ்சம் ஏமன் நாட்டில் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வாரந்தோறும் பட்டினியால் செத்து விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

போதிய உணவு, தேவையான குடிநீர் அருந்தாமல் பரிதாபமான நிலையிலும் ஆபத்தான நிலையிலும் மக்கள் காட்சியளிக்கிறார்கள். இவர்களது உயிர் இன்னும் சில தினங்களே என்ற நிலை உள்ளது. இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் அளவுகடந்த பணத்தை வைத்து கொண்டு ஆட்டம் போடும் மக்கள்!! இவர்களை பற்றின செய்திதான் இது.

பாலிங் டவுன்

மக்களை இணையத்தில் ஆட்டி படைத்த ப்ளூ வேல், மோமோ, கிகி, போன்று இது ஒரு வகையான விளையாட்டு. ஆம்.. ஆனால் பணக்காரர்களின் விளையாட்டு. இதன் பெயர் பாலிங் டவுன் (கீழே விழுவது) என்பதாம். போன வருஷம் ரஷ்யாவில் அறிமுகமான இந்த விளையாட்டுதான் உலகம் முழுதும் இப்போது வைரலாகி வருகிறது.

குப்புற விழ வேண்டும்

இந்த விளையாட்டில் மூளையை கசக்கி பிழியும் வேலையோ, வெட்டி முறிக்கும் வேலையோ கிடையாது. பணக்காரர்கள் தங்களது செல்வ செழிப்பை காட்டிக் கொள்வதற்காக இதை விளையாடுவது. அதன்படி இவர்கள், சொந்தமாக விமானம் வைத்திருந்தால் அதன் படிக்கட்டு, சொகுசு காரின் கதவு, சொகுசு படகின் படிக்கட்டு, போன்றவற்றில் தலைகுப்புற விழ வேண்டும். இப்படி இவர்கள் விழுவதை புகைப்படமாக எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும். இதுதான் விளையாட்டு விதி.

நாய், பூனைகள்

உடனே பெரும்பாலான பணக்காரர்களும், இதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு, தங்கள் கெத்து காட்டும் வகையில் எங்காவது கீழே குப்புற விழுந்து அதை போட்டோ பிடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி எல்லாரும் விளையாடுகிறார்கள். மேலும் சிலரோ, தாங்கள் கீழே குப்புற விழாமல், நாய், பூனைகளை விழச்செய்து அதை போட்டோ பிடித்து இணையத்தில் போடுகிறார்கள்.

டிராபிக் ஜாம்

இதுபோன்றுதான் சீனாவின் ஷாங்காய் நகரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. 2 பெண்கள் இந்த பாலிங் டவுன் விளையாட்டை நடுரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதாவது தலைகுப்புற படுத்து கொண்டு போட்டோ எடுத்து கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தில் டிராபிக் ஜாம் ஆகிவிட்டது. போலீஸார் விரைந்து வந்து அந்த பெண்களை சத்தம் போட்டு அபராதம் விதித்தனர்.

நண்டு கொழுத்தா...

இப்பத்தான் கீகீ என்னும் ஆபத்தான விளையாட்டு ஒருவழியாக ஓய்ந்தது. அதற்குள் இந்த பாலிங் டவுன் விளையாட்டு ஆரம்பிச்சாச்சு. நண்டு கொழுத்தா வளையில இருக்காதுன்னு சொல்லுவாங்களே... அதுபோலதான் இந்த இணையத்தில் விளையாடும் விளையாட்டுக்களும்!!