10 நாட்களாக ஒரு பத்திரிக்கையாளரை தேடும் 15 நாடுகள்.. பின்லேடனை பேட்டி எடுத்தவர்.. திடீர் மாயம்!

பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் காணாமல் போய் உள்ளார்.

இஸ்தான்புல்: சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி துருக்கில் காணாமல் போய் உள்ளார்.

பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன சம்பவம் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒரு பத்திரிகையாளரை 15 நாடுகள் தற்போது தேடி வருகிறது.

இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வருகிறது. சவுதியை சேர்ந்த இவரை சவுதி அரசாங்கமே கொன்றுவிட்டதாக செய்திகள் வருகிறது.

யார் இவர்

சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் நடத்திய அட்டகாசங்களை விடாப்பிடியாக எழுதி உலகிற்கு வெளிச்சமிட்டுக்கட்டியவர். அல்கொய்தா பற்றி அக்குவேறு ஆணிவேராக எழுதியவர். அல்கொய்தா எந்த நாடுகளை எப்படி தாக்கியது, எப்படி தாக்க போகிறது என்று துல்லியமாக பட்டியலிட்டவர் ஜமால் கசோக்கி.

பேட்டி எடுத்தவர்

இவரது அசாத்திய பத்திரிக்கை அறிவை பார்த்து பின்லேடனே இவரை அழைத்து பேசி இருக்கிறார். ஆம், பின்லேடனை இவர் பேட்டி எடுத்துள்ளார். ஒருமுறை இல்லை மொத்தம் 7 முறை. இப்போதும் கூட நாம் பயன்படுத்தும் பல பின்லேடன் புகைப்படங்கள் இந்த சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி எடுத்ததுதான்.

அரசுக்கு எதிரானார்

இவர் முதலில் சவுதி அரசுக்கு ஆதரவாகத்தான் இருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். அவர் சவுதியை எப்படி தவறாக வழிநடத்துகிறார் என்றும் எழுதினார்.

கடுமையாக விமர்சனம் வைத்தார்

வாஷிங்டன் போஸ்ட் தொடங்கி பல பத்திரிக்கைகளில் இவர் சவுதி அரசு பற்றி பக்கம் பக்கமாக எழுதினார். இதையடுத்து இவர் மீது சவுதி நடவடிக்கை எடுக்க தயாராக இருந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன் சவுதியில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறினார்.

ஏன் வந்தார்

இந்த நிலையில்தான் இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கி வந்துள்ளார். அங்கு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு இவர் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அதுகுறித்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று இவர் அங்கு சென்றுள்ளார். ஆனால் உள்ளே செல்லும்போதே, தன்னுடைய காதலியிடம், நான் வெளியே வர வாய்ப்பு குறைவு, நான் வரவில்லை என்றால் எல்லோருக்கும் தெரியப்படுத்திவிடு என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

வெளியே வரவில்லை

அதேபோல் அந்த கட்டிடத்திற்குள் சென்றவர் 10 நாட்கள் ஆகியும் வெளியே வரவில்லை. இப்போது அவர் எங்கே இருக்கிறார்கள் என்றும் யாருக்கும் தெரியவில்லை. காணாமல் போய்விட்டாரா, கடத்தப்பட்டுவிட்டாரா என்றும் யாருக்கும் தெரியவில்லை.

கொலை

இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சவுதி அரசு அனுப்பிய கொலைகார டீம் ஒன்று இவரை கொன்றுள்ளதாக துருக்கி பத்திரிகைகள் எழுதி வருகிறது. அந்த கட்டிடத்திற்குள் சென்று இவர்கள் அவரை தாக்கி கொன்று இருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இது உண்மையா என்று தெரியவில்லை.

பல ஆதாரங்கள்

இதற்கு ஆதாரமாக பல சிசிடிவி காட்சிகளையும் வெளியே விட்டுள்ளது. அந்த துருக்கி கட்டிடத்திற்கு வெளியே சவுதி கார் வருவது, அதே நாள் மாலை சவுதி விமானம் நாட்டை விட்டு வெளியேறுவது என்று நிறைய சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. முடி இளவரசர் முகமது பின் சல்மான் அனுப்பிய ஆட்கள்தான் இவர்கள் என்றும் எழுதியுள்ளது.

உலக நாடுகள் தேடுகிறது

இவரை 15க்கும் அதிகமான உலக நாடுகள் தேடுகிறது. இவரை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று இந்த நாடுகள் போராடி வருகிறது. இவர் கொல்லப்பட்டு இருந்தால் சவுதி மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று அமெரிக்காவும், இங்கிலாந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது.