காலையில் எழுந்து.. மணப்பெண் கோலத்தில்.. கல்லறையில் அழுது புரண்டு.. காதல் உணர்வுபூர்வமானது!

காதலன் கல்லறையில் ஜெசிகா அழுத புகைப்படங்கள் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

இண்டியானாபோலிஸ்: காதல்!! உணர்வுபூர்வமானது... உருக்கத்தின் மொத்த வடிவமானது.. ஆராதிக்க கூடியது... மரணித்தாலும் மண்ணில் உலாவுவது!! எல்லா காலங்களிலும்தான்!! இந்த சம்பவமும் அப்படித்தான்!

ஜெசிகா... அழகான இளம்பெண். கெண்டல் மர்பி என்ற இளைஞரை உயிருக்குயிராக விரும்பினார். கெண்டல் தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தவர். இருவருமே காதல் வானில் பறந்தனர்.

காலன் அழைத்து கொண்டான்

வாழ்வில் ஒன்று சேரும் நாளையும் குறித்தனர். அந்த நாள் செப்டம்பர் 29!! அன்றுதான் இருவருக்கும் திருமணம் என நிச்சயமானது. இரு வீட்டு தரப்பிலும் சந்தோஷம்தான். திருமணத்துக்கு 10 மாதம் இருந்தாலும் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற துவங்கின. ஆனால் விதி!! நவம்பர் மாதம் மதுபோதையில் இருந்த கெண்டல் மர்பியை காலன் தன்னுடன் அவசர அவசரமாக அழைத்து சென்றுவிட்டான்.

மீள முடியாத நினைவுகள்

ஆம்.. அது ஒரு சாலை விபத்து. ஸ்பாட் அவுட் ஆனார் கெண்டல்.... கதறி துடித்தார் ஜெசிகா... எல்லா கனவுகளும் சுக்குநூறாக நொறுங்கி போயின... வாழ்வே சூனியமானது. பெற்றோரும் உறவினர்களும், நண்பர்களும் எல்லாருமே எவ்வளவோ சொல்லி பார்த்தும் காதலனின் நினைவில் இருந்து ஜெசிகாவால் மீளவே முடியவில்லை.

மணப்பெண் உடை

நாட்கள் சோகத்துடனும், கண்ணீருடனும் பறந்தன. கிட்டத்தட்ட 10 மாதம் ஆகிவிட்டது கெண்டல் உயிரிழந்து!! செப்டம்பர் 29-ம் தேதி வந்தது. அந்த நாள்தான் திருமணம் செய்ய குறித்த நாள்!! அன்றைய தினம் ஜெசிகா காலையிலேயே எழுந்துவிட்டார். கல்யாணத்துக்காக வாங்கி வைத்திருந்த மணப்பெண் உடையை அணிந்து கொண்டார்.

அழுது புரண்ட ஜெசிகா

ஒரு கல்யாண பெண் என்னவெல்லாம் அலங்காரம் செய்வாரோ அதையெல்லாம் அணிந்து கொண்டார். அக்மார்க் மணப்பெண்ணாகவே மாறிவிட்டார். நண்பர்கள், உறவினர்களை அழைத்து கொண்டு, நேராக கெண்டலின் கல்லறைக்கு ஓடினார். மணப்பெண் கோலத்தில் ஜெசிகா அந்த கல்லறையில் புரண்டு புரண்டு அழுதார். மனத்தாங்கலை கட்டுப்படுத்தவே முடியாத அவரது சகோதரி கூடவே இருந்து ஆறுதல் கூறினார்.

உணர்வுபூர்வ புகைப்படங்கள்

உடனிருந்தவர்கள் எல்லோருமே ஜெசிகாவின் செயலால் அதிர்ச்சியுடன் கண்ணீரையும் சிந்தினார்கள். கல்லறையை சுற்றி சுற்றி வந்து ஜெசிகா புகைப்படங்கள் எடுத்து கொண்டார். தி லவ்விங் லைஃப் போடோகிராஃபி என்ற புகைப்பட நிறுவனம், கெண்டல் உயிருடன் இருந்திருந்தால் இருவருக்கும் எப்படி திருமணம் நடந்திருக்குமோ அவ்வாறே புகைப்படங்களை எடுத்தது. இதை கடந்த 5-ம் தேதி தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.

அதிர்ந்த கல்லறை தோட்டம்

கெண்டல் பயன்படுத்திய ஷூவில் மலர்கள் வைத்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படம், ஜெசிகாவுக்கு அருகில் கெண்டல் புகைப்படம், கெண்டலின் கல்லறையில் ஜெசிகா மண்டியிட்டு கிடக்கும் புகைப்படம், கெண்டலின் உடைகளுடன் இருக்கும் ஜெசிகாவின் புகைப்படம் என ஒவ்வொரு புகைப்படங்களும் நம் கண்களை குளமாக்கிவிட்டு, மனதை பிசைந்து செல்கிறது. காதலன் இறந்து 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கல்யாணத்துக்கு நாள் குறித்த அன்றைய தினத்தில் மணப்பெண் கோலத்தில் ஜெசிகா அழுதது அங்கிருந்த கல்லறை தோட்டத்தையே அதிர வைத்தது!