நண்பரைத் திட்டியதால் ஆத்திரம்.. பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரிபாய்.. 18 ஆண்டுகள் சிறை!

இஸ்தான்புல்: பீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்த இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து துருக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துருக்கி நாட்டின் எஷ்கிஸெகிர் என்ற இடத்தைச் சேர்ந்த புராக் என்ற இளைஞர் பீட்சா டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு எச்சில் துப்பிய பீட்சாவை டெலிவரி செய்துள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

இது தொடர்பாக விபரம் அறிந்த பீட்சா ஆர்டர் செய்த நபர், புர்கா மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் புர்கா அளித்த விளக்கத்தில், 'தான் பீட்சாவில் எச்சில் துப்பவில்லை என்றும், பீட்சாவுடன் செல்பி மட்டுமே எடுத்துக் கொண்டதாகவும்' தெரிவித்தார். ஆனால், புர்காவின் இந்த விளக்கத்தை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், புர்காவின் செயல் மனிததன்மையற்றது எனக் கூறிய நீதிபதி, அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதே வாடிக்கையாளர் பீட்சா சூடாக இல்லை என புர்காவின் நண்பரைத் திட்டியுள்ளார். இதனால், அந்த இளைஞரின் வேலையே பறிபோனது. இந்த கோபத்தில் தான் பீட்சாவில் புர்கா எச்சில் துப்பியதாகக் கூறப்படுகிறது.

அதோடு தான் பீட்சாவில் எச்சில் துப்பியதை செல்பியாக எடுத்து அதனை தன் நண்பருக்கும் அவர் அனுப்பியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து தான் புராக் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.