பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் சுதந்திரமான விசாரணை நடத்த ஐநா பொதுச்செயலர் கோரிக்கை

ஐநா: 'காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டது பற்றி சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.பாலஸ்தீனியத்தில் இருந்து வெளியேறிய அகதிகள் நாடு திரும்ப அனுமதிக்க வலியுறுத்தி, காசா முனையில் நேற்று முன்தினம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, காசா முனையில் உள்ள இஸ்ரேல் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது சிலர், இஸ்ரேல் தடுப்புச் சுவர்களை தகர்க்க முயன்றனர். 

இதையடுத்து, கூட்டத்தை நோக்கி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். பீரங்கி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில், 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 1400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 760 பேருக்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. மற்றவர்கள் ரப்பர் தோட்டா, கண்ணீர்புகை குண்டு வீச்சினால் காயமடைந்தனர். கடந்த 2014ல் நடந்த காசா போருக்குப் பிறகு பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் - இஸ்ரேல் இடையே மீண்டும் மிகப்பெரிய மோதல் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும், உயிர் பலிகள் அதிகளவில் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. 
இச்சம்பவம் பற்றி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு கூட்டப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, இந்த சம்பவத்தால் வன்முறை மேலும் பரவுவதை கட்டுப்படுத்த, இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் இஸ்ரேல் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டத்துக்கு முன்பாக ஐநா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேன்னி டனன் வெளியிட்ட அறிக்கையில், 'யூதர் திருவிழாவை கொண்டாடுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து யூதர்கள் வந்து தங்கள் குடும்பத்துடன் இணைந்துள்ள நிலையில், அதை சீர்குலைப்பதற்கான சதியில் பாலஸ்தீனியர்கள் ஈடுபட்டனர். இதன் மூலம், இஸ்ரேல் பற்றி பொய் தகவலை பரப்ப முயன்றனர். எல்லையில் இஸ்ரேல் அமைத்துள்ள தடுப்புச் சுவர்களை தகர்க்க, பாலஸ்தீனிய மக்களுடன் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் முயன்றனர். அதை தடுப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காசா முனையில் நடந்த தாக்குதல் குறித்து சுதந்திரமான, வெளிப்டையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இருதரப்புக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த ஐநா தயாராக இருக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது. 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ