ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்

சக்கர நாற்காலியால் உட்கார்ந்திருக்கிறவனால் என்ன செய்திட முடியும் என்று கேள்வி எழுப்பியவர்கள் முன்னால் நம்மால் எட்டிப் பிடிக்க முடியாத, அறிவியல் கோட்பாடுகளை எல்லாம் உருவாக்கி மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

டைம் மெஷின்,ப்ளாக் ஹோல்,ஏலியன் குறித்தெல்லாம் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் A Brief Histroy of Time என்ற புத்தகம் தமிழ் உட்பட 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கன்னத்தில் இருக்கும் சில தசைகள் மட்டுமே அசையும், அதைத் தவிர பிற உடல் பிற பாகங்கள் எல்லாம் செயலிழந்து விட்டது. இந்த நிலையில் சென்சார் பொருத்தப்பட்ட கண்ணாடியுடன் கணினியுடன் இணைக்கப்பட்ட வீல் சேரில் உட்கார்ந்தபடி அறிவியல் உலகத்தையே தனதாக்கிக் கொண்டார். உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என்று போற்றப்படும் ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங் தன்னுடைய 76வது வயதில் இன்று காலமானார்.

இவரைப் பற்றிய நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யத் தகவல்கள்

#1

ஆரம்ப கால கல்வியை ஸ்டீஃபன் ஹாக்கிங் வெற்றிகரமாக இருக்கவில்லை. எட்டு வயது வரை முறையாக படிக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். ஆனால் இவருக்கு கணிதத்தில் அலாதி ப்ரியம் இருந்திருக்கிறது. அறிவியலும் சற்று விருப்பமான பாடம் தான். தந்தை ஃபிராங் மகனை மருத்துவராக்க வேண்டும் என்று கனவு கண்டார்.

 

#2

இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தினால் இவரது குடும்பம் ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து வடக்கு லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். தொடர்ந்து அல்பான்ஸ் நகரத்திற்கு குடிபெயர்ந்தார்கள். அங்கே தான் பள்ளிக்கல்வியை கற்றார் ஹாக்கிங். கல்லூரியில் கணிதம் படிக்க வேண்டும் என்பது விருப்பம் ஆனால் கல்லூரியில் அந்த பாடம் இல்லாததால் இயற்பியலை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

 

#3

1962 ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்டவியல் குறித்து ஆய்வினை மேற்கொண்டார். 1965 ஆம் ஆண்டு பி எச் டி பட்டம் பெற்றார் இவருக்கு 21 வயது ஆன போது ஏஎல்எஸ் (amyotrophic lateral sclerosis )

இது நரம்பு தொடர்பான பிரச்சனை, இது பாதிக்கப்பட்டால் உங்கள் தசைகளை வலுவிழந்து விடும் அதோடு உங்களது உடல் இயக்கத்தை முற்றிலுமாக முடக்கிவிடும்.

 

#4

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்தார். அதன் பிறகு தான் அவருக்கு நரம்பு குறைபாடு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு இன்னும் சில காலங்களே அவர் உயிருடன் இருப்பார் என்று சொல்லப்பட்டது.

மருத்துவர்கள் அப்போது இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் ஸ்டீபன் உயிருடன் இருப்பார் என்றனர்.


#5

பெரும்பாலும் இந்த ஏஎல்எஸ் ஐம்பது வயதுக்கு மேலே தான் தாக்கும், மெல்ல அவரது இயக்கத்தினை பாதித்து மரணத்தை கொடுத்திடும். ஆனால் ஸ்டீபனுக்கு 21 வயதிலேயே இது தாக்கப்பட்டிருக்கிறது.

கை கால்கள் இயக்கத்தினை முதலில் பாதிக்கும், என்னால் நடந்து கடக்க முடியாத பகுதிகளை என் மனதால் செல்ல விரும்புகிறேன், அதை நான் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னார் ஹாக்கிங்.

 

#6

1985 ஜெனிவாவிற்கு பயணித்த போது ஹாக்கிங்கிற்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியது. அதில் சுயநினைவை இழந்தவருக்கு வெண்ட்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்க பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் ஹாக்கிங்கின் மனைவி ஜேன் மறுத்துவிடவே ட்ராக்டோமி அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள்.

 

#7

இப்போது செயற்கை சுவாசம் அளித்தால் வாழ்நாள் முழுமைக்கும் செயற்கை சுவாசம் உதவியுடன் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற கட்டாயம் ஏற்படும் நிலை இருந்ததால் மனைவி ஜேன் அதனை மறுத்திருக்கிறார்.

மருத்துவர்கள் செய்த ட்ராக்டோமி சிகிச்சையினால் ஹாக்கிங்கிற்கு சீரான மூச்சு விட முடிந்தது என்றாலும் பேசும் திறன் முற்றிலுமாக நின்று போனது.

 

#8

ஹாக்கிங் அதன் பிறகு speech synthesizer பயன்படுத்த துவங்கினார். இதனை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியிருந்தது. ஹாக்கிங் உட்கார்ந்திருக்கக்கூடிய வீல் சேருடன் ஒரு கணினி இணைக்கப்பட்டிருக்கும், ஹாக்கிங்கின் கை அசைவுகளைக் கொண்டு கணினித் திறையில் தெரிகிற வார்த்தைகளை தேர்ந்தெடுத்தால் அது சத்தமாக ஒலிக்கும்.

 

#9

காலப்போக்கில் ஹாக்கிங்கின் கைகளின் இயக்கமும் முற்றிலுமாக நின்று போனது. இப்போது ஹாக்கிங்கின் முழு உடல் இயக்கமும் கிட்டத்தட்ட முடங்கிப் போனது என்று தான் சொல்ல வேண்டும். கன்னத்தில் இருக்கும் சிறிய தசை மட்டும் அசைந்தது. அதனால் இன்ஃப்ரா ரெட் ஆற்றல் கொண்ட கண் கண்ணாடியை அணியத் துவங்கினார்.

இதன் மூலமாக கன்னத்து தசையின் அசைவினை உணர்ந்து அதற்கேற்ப செயலாற்றும்.

 

#10

இன்டெல் நிறுவனம், உருவாக்கி கொடுத்த கணினியையும், அவர்கள் உருவாக்கிய ரோபோட்டிக் குரலையும் பயன்படுத்தி தான் ஹாக்கிங் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

 

#11

ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இயந்திர குரல் அமெரிக்கன் ஆங்கிலத்தை பேசக்கூடியது. அவர் பயன்படுத்துவது DECTalk DTC01 கிட்டத்தட்ட 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அதன் பிறகு ஹாக்கிங் அதனை மேம்படுத்தவோ அல்லது மாற்றவோ இல்லை. அந்த கருவி மிகவும் பெரியதாகவும் எளிதில் உடைந்துவிடக்கூடியதாகவும் இருந்துமே ஹாக்கிங் மாற்றியமைக்கவில்லை.

 

#12

அறிவியல் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்து விட்ட பிறகும் இன்னும் இதை ஏன் மாற்றியமைக்காமல் இருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, இந்த குரலை நான் கேட்கவில்லை, என்னால் கேட்க முடியாது அதனால் இதனை விட சிறந்த ஒன்று என நான் தேடிச் செல்லவில்லை என்றார். இவர் ஸ்டார் ட்ரெக் என்ற சேனலில் நெக்ஸ்ட் ஜெனரேசன் என்ற டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கிறார்.

அதில் ஆல்பேர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனுடன் கலந்தாலோசிப்பது போல காட்சியில் ஹாக்கிங் இடம் பெறுவார்.

 

#13

2006 ஆம் ஆண்டு ஹாக்கிங் விண்வெளிக்குச் செல்ல விருப்பம் தெரிவிக்கவே, அறிவியாலாளர்கள் அவரது விருப்பத்தை சாத்தியப்படுத்தினார்கள். 2007 ஆம் ஆண்டு மிகப்பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் ப்ரான்சன் ஹாக்கிங் விண்வெளிக்கு பயணிக்க ஆகும் செலவினை முழுவதுமாக தான் ஏற்பதாக சொன்னார்.

 

#14

அதைத் தொடர்ந்து புவியிர்ப்பு இல்லாத இடத்தில் உடலின் இயக்கமே செயலிழந்த ஸ்டீபன் ஹாக்கிங் மிதந்து சாதனை படைத்தார். பள்ளிப்பருவத்தில் படிப்பில் பின் தங்கிய மாணவராகவே இருந்திருக்கிறார் ஹாக்கிங்.

ஆனால் இந்த உலகம் குறித்தும், உலகம் எப்படி இயங்குகிறது என்பது குறித்து தீராத கேள்வி அவர் மனதில் இருந்தது. அவர் கல்வியில் சிறந்து விளங்காததற்கு காரணம் ஹாக்கிங்கிடம் இருக்கும் சோம்பேறித்தனம் தான் என்றார்கள் ஆசிரியர்கள்.

 

#15

அறிவியல் ஆராய்ச்சியாளர், உடலின் இயக்கம் முடக்கப்பட்டு சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் என்பதெல்லாம் பார்ப்பவர்களுக்கு தான், ஆனால் ஹாக்கிங் தன்னளவில் மிகுந்த உற்சாகமான மனிதராகவே இருந்தார். அதோடு ஹாக்கிங் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்றால் மிகையாகாது.

 

#16

இவரைப் பற்றிய கதை சிம்ப்சன்ஸ் என்ற பெயரில் அனிமேஷன் கார்டூன் வடிவில் படமாக்கப்பட்டது. அதற்கு குரல் கொடுக்க ஹாக்கிங்கின் voice synthesiser மூலமாக குரல் கொடுக்க முன் வந்தார் ஹாக்கிங்.