நேபாள விமான விபத்தில் 50 பேர் பலி

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் திங்கள்கிழமை தரையிறங்கிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் 50 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் இருந்து இயக்கப்பட்ட அந்த விமானத்தில் 71 பேர் பயணித்தனர். விபத்துக்குள்ளானவுடன் விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தததால், அதில் இருந்தவர்கள் வெளியே தப்பிச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டதாக அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தக் கோர விபத்து நேர்ந்திருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானியின் கவனக் குறைவு கூட அதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இதுதொடர்பான விரிவான விசாரணைக்கு நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. 
'பாம்பர்டையர் க்யூ 400' ரக பயணிகள் விமானம் ஒன்று வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து காத்மாண்டு நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டது. அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பயணிகளும், ஊழியர்கள் 4 பேரும் இருந்தனர். அவர்களில் 33 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 32 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. அவர்களுடன் சீனா மற்றும் மாலத் தீவுகளைச் சேர்ந்த 2 பயணிகளும் விமானத்தில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானமானது பிற்பகல் 2.20 மணிக்கு காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. திரிபுவன் விமான நிலையத்தின் தெற்கு பகுதியில் அதனைத் தரையிறக்க அனுமதியளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், வடக்குப் பகுதியில் உள்ள ஓடுபாதையில் அந்த விமானம் இறங்கியது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது.
அதிவேகமாக அந்த விமானம் சென்றதால் அதன் முன்பகுதி முழுவதும் தரையில் மோதி சேதமடைந்தது. அதன் தொடர்ச்சியாக விமானத்தில் தீப்பிடித்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
தகவலறிந்த விமான நிலைய ஊழியர்களும், விபத்து மேலாண்மைக் குழுவினரும் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பின்னர், விமானத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர்.
முதல்கட்டமாக 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, விமானத்துக்குள் இருந்து 31 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலரது உடல்கள் விமானத்துக்குள் சிக்கியிருப்பதாகவும், அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேபாளப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் சஞ்சீவ் கெளதம் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:
அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக வேறு இடத்தில் சம்பந்தப்பட்ட விமானம் தரையிறங்கியது. அப்போது அது கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையில் இருந்து விலகியது. அதன் தொடர்ச்சியாகவே விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் குறைந்தது 50 பேராவது இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்குக் காரணம் என்ன என்பதை இதுவரை தெளிவாகக் கண்டறிய இயலவில்லை. 
மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தைத் தொடர்ந்து திரிபுவன் விமான நிலையத்துக்குள் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்து உயிர்தப்பிய ஒரு பயணி கூறியதாவது:
டாக்காவில் இருந்து ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து நான் பயணித்து வந்தேன். காத்மாண்டில் விமானம் தரையிறங்கியபோது பெரும் வெடிச் சத்தத்துடன் எங்கோ சென்று மோதியதை உணர்ந்தேன். இதனால் பயணிகள் அனைவரும் பலத்த கூச்சலிட்டனர். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதிருஷ்டவசமாக நான் உயிருடன் மீட்கப்பட்டுள்ளேன் என்றார் அவர்.
மீட்புப் பணிகளை பார்வையிட்டார் பிரதமர் 
விபத்து நேர்ந்த இடத்துக்குச் சென்ற நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, உள்துறை அமைச்சர் ராம் பகதூர் தாப்பா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஈஸ்வர் போகேரெல் ஆகியோர் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர்.


நேபாளத்தில் நேரிட்ட விமான விபத்துகள் 
 மியாக்தி மாவட்டத்திலுள்ள ருப்சி பகுதியில் கடந்த 2016 பிப்ரவரியில் 'தாரா ஏர்' நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகினர்.
 அர்காகாஞ்சி மாவட்டத்தில் கடந்த 2014 பிப்ரவரியில் 'நேபாள் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
 திரிபுவன் சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2012 செப்டம்பரில் 'சீதா ஏர்' நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேரும், ஜோம்சோம் விமான நிலையம் அருகே அதே ஆண்டு மே மாதம் 'அக்னி ஏர்' விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேரும் உயிரிழந்தனர்.