போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஜெனீவாவில்

போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஸ்ரீபன் றாப் கலந்து கொள்கின்ற முக்கியமான நிகழ்வொன்று ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (மார்ச் 12) அன்று ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபையில் '' இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சட்டவிரோத தடுப்பு, சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றிற்கு சர்வதேச அமைப்பு எவ்வாறு பொறுப்புணர்வு வழங்குவதில் தோல்வி அடைந்தது '' (How the International System has Failed to Provide Accountability for Mass Atrocities: Ongoing illegal detention, torture and sexual violence against Tamils in Sri LankA) எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற பக்க நிகழ்விலேயே முன்னாள் தூதர் கலந்து கொள்ள இருக்கின்றார்.

இந்நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சிறிலங்காவை கண்காணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளருமாகிய றிச்சாட் ரொஜெர்சும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் போர் குற்றங்களை அடிப்படையாக வைத்து இலங்கை தொடர்பிலான தீர்மானங்களை அமெரிக்காவே முன்னின்று கொண்டு வந்திருந்த நிலையில், போர் குற்றவிவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரேயே தமிழர் தரப்பு ஜெனீவாவில் களம் இறக்கியிருப்பது முக்கியத்துவம் உள்ள ஒன்றாக கருதப்படுகின்றது.

மதியம் 12:30 மணிக்கு 25ம் இலக்க பக்க அறையில் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.