இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்

வாஷிங்டன்: இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்துவார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் டேன் கோட்ஸ் கூறியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமிற்கு புதுந்து ஜேஷி முகமத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற மறு தினமே அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தீவிரவாதிகளுடன் நட்பு பாராட்டுவது.தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் செய்வது, சீனாவுடன் நெருக்கமாக செல்வது போன்ற செயல்களால் அமெரிக்காவின் நலனிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பாகிஸ்தான் செயல்படுவதாக டேன் கோட்ஸ் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாது அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கோட்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உலக அச்சுறுத்தல்கள் தொடர்பாக உளவுத்துறை இயக்குநர் டேன் கோட்ஸ் அளித்த தகவலில், ''குறைந்த தூர இலக்கை குறிவைத்து தகர்க்கும் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்து வருகிறது. இதுதவிர, நீண்ட தூர இலக்கை தகர்க்கும் ஏவுகணைகள், கடல் வழி ஏவுகணைகள், எதிரி ஏவுகணைகளை வழிமறித்து தகர்க்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பில் புதிய அச்சுறுத்தல் உருவாகும் நிலை உள்ளது'' என குறிப்பிட்டார்.

சஞ்சுவான் ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டிருக்கும் இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.