ஊழல் வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபர் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை

தென்கொரியாவில் ஊழல் வழக்கில் முன்னாள் அதிபரின் தோழிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தென்கொரியாவில் அதிபராக இருந்து வந்தவர் பெண் தலைவர் பார்க் கியுன் ஹை. இவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில். தென் கொரிய அரசில் சோய் சூன் சில் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கினார். அதைக் கொண்டு அவர் பல்வேறு ஊழல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக அதிபராக இருந்த பார்க் கியுன் ஹையுக்கும் சிக்கல் எழுந்தது. அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், சோய் சூன் சில் மீதான ஊழல் வழக்கை சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. அவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இதே வழக்கில், லாட்டி குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான ஷின் டாங் பின்னுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 2½ ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.