அத்துமீறி தாக்கினால் சரியான பதிலடி கொடுப்போம் பாகிஸ்தான் எச்சரிக்கை

சஞ்சுவான் தாக்குதலுக்கு பதிலடி என்ற பெயரில் இந்தியா ஏதாவது அசட்டுத் துணிச்சலான காரியத்தில் (எல்லை தாண்டிய தாக்குதல்) இறங்கினால் அதற்கு சரியான வகையில் பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் கான் எச்சரிக்கை விடுத்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சஞ்சுவானில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். 
இத்தாக்குதலில் 6 வீரர்கள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 


சஞ்சுவான் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் கான் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா அசட்டுத் துணிச்சலான காரியத்தில் இறங்கினால் அதற்கு நாங்கள் எங்களது பாணியில் சரியான முறையில் பதிலடி கொடுப்போம். உரிய ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டக் கூடாது. அதற்குப் பதிலாக பாகிஸ்தானுக்கு எதிராக அரசு ஆதரவுடன் உளவு பார்த்ததற்கு (குல்பூஷண் விவகாரம்) இந்தியா பதிலளிக்க வேண்டும்.
பாகிஸ்தானைப் பாதுகாப்பதில் முப்படைகளும் முழு அளவில் தயாராக உள்ளன. எனவே, 
இந்தியா அத்துமீறிய வகையில் எந்த விதத்தில், எந்த அளவில் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்காமல் விட மாட்டோம். அவ்வகைத் தாக்குதலுக்கு சரிசமமான பதிலடி தரப்படும் என்றார் அவர்.
இதனிடையே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்லாமாபாதில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டும் இந்தியாவின் மனப்போக்கு வருந்தத்தக்கது. சஞ்சுவான் மோதல் தொடர்பான புலன்விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளதாக இந்தியாவை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அந்நாட்டின் குற்றச்சாட்டுகள் அவசரக் கோலத்தில் எழுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு இந்தியா ஒரு நீதிபதியாக மாறி தீர்ப்பளிப்பதை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த அவதூறு பிரசாரத்துக்கு நம்பகத்தன்மை இல்லை. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கருத்து வெளியிட்ட தொனி ஏற்றுக் கொள்ள இயலாததாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.