தேம்ஸ் நதிக்கரையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு லண்டன் விமான நிலையம் மூடல்

லண்டன் : லண்டனின் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ரன்வேயை ஒட்டியுள்ள தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் முன்எச்சரிகையாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

லண்டன் விமான நிலைய ஓடுபாதையை ஒட்டியுள்ள கிங் ஜார்ஜ் வி டாக் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய மையப் பகுதியில் நடந்து கொண்டிருந்த பராமரிப்பு பணியின் போது இது கண்டறியப்பட்டுள்ளது.

வெடிகுண்டு கண்டுபிடிப்பையடுத்து 214 மீட்டருக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக லண்டன் சிட்டி விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகள் பயத்தை தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திங்கட்கிழமை விமான பயணத்திற்கு திட்டமிட்டிருந்தவர்கள் சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக லண்டன் மாகாண போலீஸார் தெரிவித்துள்ளனர். 1940 மற்றும் 1941 இடைப்பட்ட காலத்தில் ஜெர்மன் படைகளால் ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகள் லண்டன் மீது வீசப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள இந்த வெடிகுண்டு பற்றி ராயல் நேவி படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.