சாலையை காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்த நபர்

சாலையை காணவில்லை என்றும் அதனைக் கண்டுபிடித்து அந்தத் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவமானது, பொலிஸாரை மட்டுமல்ல, பல பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாலையை காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்த நபர்!

இந்தியாவின், திருப்பூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், சாலையை காணவில்லை என்றும், சாலைகளில் போடப்பட்ட வெள்ளை நிறக் கோடுகள், இரவில் ஒளிரும் பிளாஸ்டிக் ஒளிபரப்பான்கள் மற்றும் பெயர்ப் பலகைகள் என்பவற்றைக் காணவில்லை எனவும் அதனால் பொலிஸார் அவற்றினை கண்டுபிடித்து தருவதோடு, திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியின் பல பகுதிகளில் கடந்த 2014, 2015ஆம் ஆண்டுகளில், மாநகராட்சி சார்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு, உலக வங்கி நிதி பெறப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு திருப்பூரில் கோல்டன் நகர், எம். எஸ்.நகர், கட்டபொம்மன் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் போடப்பட்டன.

தனியார் ஒப்பந்தத்காரர்கள் மூலம் போடப்பட்ட இந்தச் சாலைகளின் மேல், வெள்ளைக் கோடுகள் வரைந்து, அவற்றின் மீது ஒளிபரப்பான்கள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு 9 லட்சத்து 8 ஆயிரம் ரூபா(இந்தியப் பெறுமதி) செலவானதாக, ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. மேலும் 85,000 ரூபாய் மதிப்பில் இந்தச் சாலைகளுக்கு பெயர் பலகை அமைத்ததாகவும் ஆவணங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பணிகள் எதுவும் செய்யாததை கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், மாநகராட்சி ஆவணங்களின் படி, போடப்பட்ட சாலையைக் காணவில்லை என திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆனால் பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு மீது வழக்குப்பதிவு ஏதும் செய்யாததைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தமையை அடுத்து, வழக்கு விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது இவரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த முறைப்பாடு வழக்குப் பதிவு செய்யப்படுவதால், காணாமல் போன சாலையை பொலிஸார் கண்டுபிடித்து தருவார்களா? என, திருப்பூர் மக்கள் ஆவலுடன் உள்ளார்கள். நகைச்சுவை நடிகர் வடிவேல் ஒரு திரைப்படத்தில், தனது கிணற்றினை காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்து, அந்த இடத்துக்குக் பொலிஸாரையும் கூட்டிச் சென்று 'இங்கிருந்த கிணறு, 500 ஏக்கர் தென்னந்தோப்பு எல்லாவற்றையும் காணவில்லை' என்று புகார் கூறியது போல உள்ளது, ரவிச்சந்திரன் கூறுவது என்று பலரும் இந்த விடயத்தை சிலர் நகைச்சுவையாக கூறி வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் சிலரின் மோசடிகள் அம்பலப்படப்போகிறது என்று சிலரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.