ஒன்றல்ல.. இரண்டல்ல.. 35,000 போராட்டங்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.. முதல்வர் பகீர் குற்றச்சாட்டு!

எனக்கு எதிராக 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டி விட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி: எனக்கு எதிராக 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டி விட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

என்ன நலத்திட்டம்

அவர் தனது பேச்சில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அரசு மக்களுக்கு என்ன செய்தது என்று மேடைக்கு மேடை பேசி வருகிறார். கல்விக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிக நிதியை ஒதுக்கினார். மருத்துவ கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கால்நடை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை கொண்டு வந்தார். உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

எவ்வளவு இருக்கிறது

2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது 100க்கு 21 பேர் உயர் கல்வி கற்கும் நிலை இருந்தது. இன்று 46.8 ஆக அது உயர்ந்துள்ளது. அதே போல வேளாண்மைத்துறைக்காக அதிக நிதியை ஜெயலலிதா ஒதுக்கினார். விவசாயத்துறைக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அவை ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

எப்படி செய்தோம்

சுகாதாரத்துறை மூலமாக 2 கைகளை இழந்த ஒருவருக்கு 2 கைகள் ஆபரேஷன் மூலமாக பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. சட்டம் &ஒழுங்கை சரியில்லை என ஸ்டாலின் கூறுகிறார். இந்தியாவிலேயே தமிழகம் தான் சட்டம் & ஒழுங்கை பேணி காப்பதில் முதலிடம் என பிரபல ஆங்கில நாளிதழ் விருது வழங்கி உள்ளது.

மதுரையில் செல்ல முடிந்தது

அதை நான் பெற்று வந்துள்ளேன். எங்கள் ஆட்சியில் சட்டம் &ஒழுங்கை பற்றி பேசும் ஸ்டாலின், தற்போது மதுரையில் காலையில் நடைபயிற்சி செல்கிறார். டிசர்ட் போட்டபடி சென்று ஓட்டு கேட்கிறார். அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரால் மதுரையில் நுழைய முடிந்ததா?. மண் புழு என்று என்னை கூறுகிறார். ஆம் நான் விவசாயிகளின் நண்பன் தான் மண்புழு. அ.தி.மு.க.வின் திட்டங்களை கொண்டு செல்லும் உரமாக இருப்பவன் தான் நான்.

நான் இப்படித்தான்

ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருந்த நேரத்தில் நானும் எம்.எல்.ஏ. தான். 1974 ம் ஆண்டு சிலுவம்பாளையத்தில் கிளை செயலாளராக இருந்து பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒன்றிய பொறுப்பிலும், அவர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனேன். பிறகு எம்.பி., கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி, தலைமை நிலைய செயலாளர், அமைச்சர் என்று இப்படி படிபடியாக முதலமைச்சராக உயர்ந்தவன் தான் நான். ஸ்டாலினின் தந்தை தி.மு.க. தலைவர்.

ஸ்டாலின் மோசம்

இப்போது ஸ்டாலின் தி.மு.க. தலைவர். நான் உழைத்து கட்சியில் உயர்ந்த பதவிக்கு வந்தவன். ஆனால் ஸ்டாலின் எப்போதும் என்னை முதல்அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார். தூங்கும் போது கூட அவர் முதலமைச்சர் கனவில் இருப்பார். உங்களிடம் நல்ல எண்ணம் இருந்தால் உங்களை தேடி அந்த பதவி வரும்.

ஆட்சிக்கு கெட்ட பெயர்

எனது ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டி விட்டவர் ஸ்டாலின். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார். அவரது கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தி.மு.க.வினர் கைதாகி உள்ளனர். ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாஷா மீது 2ஜி வழக்கில் விசாரணை நடந்த நேரத்தில் அவர் மர்மமாக இறந்தார், என்று குறிப்பிட்டுள்ளார்.