மய்யம் தந்த பார்முலா கமல் பாணியில் மு.க.ஸ்டாலின்.. பலன் கிடைக்குமா

கிராம சபை கூட்டங்களினால் ஸ்டாலினுக்கு கிடைத்த பலன்கள் என்ன?

சென்னை: மு.க.ஸ்டாலின் இந்த 3 நாள் கிராம சபை கூட்டம் நடத்தியதில் கிடைத்த பலாபலன்கள் என்னவாக இருக்கும்?

நமக்கு நாமே பயணத்தில் மக்களை சந்திக்க ஸ்டாலின் தொடங்கியதுபோது, கட்சியை காப்பாற்ற கருணாநிதி இருந்தார். நல்ல தெளிவுடன் பேசிக் கொண்டு ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். அதனால் அப்போதைய நிலைமை வேறு! ஆனால் இப்போது நிலைமை வேறு!!

நமக்கு நாமே பயணத்துக்கு முன்பு இருந்த திமுகழகம்தான் அதற்கு பிறகும் நீடித்தது. பிறகு ஏன் ஸ்டாலின் நமக்கு நாமே போன்று மக்களை சந்திக்க இதுநாள் வரை செல்லவில்லை என்பது பொதுவான சந்தேகமாக உள்ளது. நமக்கு நாமே போன்றே அடிக்கடி மக்களை சந்தித்து வந்திருந்தால் நமக்கு இந்த சந்தேகமே எழுந்திருக்காது.

கமல் ஃபார்முலா

ஆனால் இப்போது மக்களை சந்திக்க கிளம்பி இருப்பது மனதில் முழு திருப்தியாக படவில்லை. அதிலும் ஸ்டாலின் கிராமங்களை நோக்கி குறி வைத்து போய் கொண்டிருக்கிறார். இது கமலின் மய்யம் தந்த ஃபார்முலா. காந்திஜிக்கு பிறகு கிராமங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் தலைவர்கள் மிக மிக குறைவாகத்தான் இருந்தார்கள்.

காப்பியடிப்பதா?

சமீப காலங்களில் அப்படி யாருமே இல்லாத பட்சத்தில் கமல்தான் கிராம நிர்வாகம் பற்றின விழிப்புணர்வை மய்யம் மூலம் கொண்டு செல்ல ஆரம்பித்தார். ஆனால் கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம்கூட ஆகாத நிலையில், கமலை பார்த்து கிராம சபையை ஒரு திராவிட, பாரம்பரியம் நிறைந்த கட்சி காப்பியடிக்கலாமா என்பது கேள்வியாக எழுகிறது.

கிராம நிர்வாகிகள்

மற்றொன்று, திமுக என்பது ஆல்போல் தழுத்து அருகுபோல் வேரோடியுள்ள நிலையில், எதற்காக ஸ்டாலின் கிராமங்களுக்கு செல்ல வேண்டும்? மக்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன தேவை என்பதை நேரடியாக சென்றுதான் ஒரு கட்சி தலைவர் தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது ஒவ்வொரு கிராமத்துக்கும் நிர்வாகிகளை நியமித்து அக்கிராமத்தின் பிரச்சனைகளை களைய திமுகவால் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன?

போராட்டங்கள்

கண்டிப்பாக முடியும்... கோடிக்கணக்கான தொண்டர்களை பெற்றுள்ள திமுகவிற்கு எத்தனையோ பேர் சேவைக்காகவும், பொறுப்புக்காகவும், கட்சியின் நலனுக்காக பாடுபடவும் காத்திருக்கிறார்கள். அதனால் இருந்த இடத்திலிருந்தே எந்தபிரச்சனையையும் திமுக நினைத்தால் களைய முடியும், அப்படி இல்லையென்றால், குறைந்தபட்சம் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்களையாவது மாவட்டங்களில் நடத்தலாம்.

உறுதி மட்டும்தானா?

ஆனால் ஸ்டாலினின் இந்த 3 நாள் கிராம சபை கூட்டத்தில் நடந்தது என்னவென்றால், மக்கள் பிரச்சனைகளை சொல்கிறார்கள், மனுக்களாக தருகிறார்கள்!! அந்த மனுக்களையும், குறைகளையும் கேட்ட ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளிக்கிறார். அப்படியென்றால், இப்போது எதுவுமே செய்ய முடியாத நிலையில், எதற்காக இப்படிப்பட்ட கிராம சபை கூட்டங்கள்?

வெறும் விளம்பரமா?

பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்று தெரிந்தும் மக்களை சந்தித்து மனுக்களை வாங்கி கொண்டிருப்பது விளம்பரத்துக்காகவா? அல்லது கமல், அன்புமணி போன்றோர் மக்களின் செல்வாக்கை பெற்றிருப்பது போல் திமுகவுக்கும் அப்படி செல்வாக்கு வேண்டும் என்பதற்காகவா? அல்லது வரப்போகிற தேர்தல்களை மனதில் வைத்தா? என தெரியவில்லை.

இது அழகல்ல

ஆனால் எதுவாக இருந்தாலும் இதுவரை நடத்திய, இனி நடத்தப்போகும் கிராம சபை கூட்டங்களில் மனுக்களை பெறுவதற்காகவே ஒரு கட்சி தலைவர் செல்வது திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கும், தேசிய அரசியலில் பேசப்படும் தலைவராக உருமாறி இருக்கும் ஸ்டாலினுக்கும் அழகல்ல!!