நம்மாழ்வாரின் மாணவர்.. மரபணு விதை மாற்றத்தை எதிர்த்தவர்.. யார் இந்த நெல் ஜெயராமன்?

சென்னை: சாதாரண ஜெயராமனாக இருந்தவர் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான நெல் விதைகளை பாதுகாத்ததால் நெல் ஜெயராமன் என அழைக்கப்பட்டு வந்தார்.

கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த ஜெயராமன் இன்று உலகத் தமிழர்களே அறியும் அளவுக்கு என்ன செய்தார்?. யார் இந்த ஜெயராமன்?

போராடினார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடுவில் ஏப்ரல் 15-ஆம் தேதி 1968-ஆம் ஆண்டு பிறந்தார். நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடினார்.

இயற்கை விவசாயம்

கடந்த 22 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் விதைகளை சேகரிக்க பாடுப்பட்ட ஜெயராமன், 174 வகையான விதைகளை சேகரித்தார். 12 ஆண்டுகளாக அவற்றை மறு உற்பத்தி செய்து 37 ஆயிரம் விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற செய்தார்.

மரபணு மாற்றம்

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, மேற்கு வங்கம், ஒரிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் இயற்கை விவசாயத்தை புகுத்தினார். மரபணு மாற்ற விதைகளை அறவே ஒழிக்க பாடுப்பட்டவர்.

அமைப்புகள்

12 ஆண்டுகளாக நெல் திருவிழாவை நடத்தி வந்தார். பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியதற்காக ஜெயராமன் தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம் ஆகிய அமைப்புகளை நடத்தி வந்தார்.

பொதுமக்கள் அஞ்சலி

இவர் ஜனாதிபதியின் கிருஷ்டி சன்மான், தமிழக அரசின் சிறந்த இயற்கை விவசாயிகளுக்கான விருது, வாழும் கலை நிறுவனர் ரவிசங்கரால் கிரிஷிரத்னா விருது ஆகியவற்றை பெற்றார். இன்று காலை 8 மணி முதல் 11 வரை அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.