அப்பாடா.. நிம்மதி கொடுத்த செல்போன்.. அதிர வைத்த லேப்டாப்.. ஜகஜால கில்லாடி சஞ்சீவி!

சென்னை: சிரித்த முகத்துடன் வலம் வந்த சஞ்சீவியின் மறுபக்கத்தை பார்த்து போலீஸாரே அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தில்லை நகரில் பெ்ண்கள் விடுதி வைத்து நடத்தி வந்தவர் சஞ்சீவி. இவரது விடுதியில் 9 இடங்களில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

திருச்சியை சேர்ந்தவர் சஞ்சீவி. இவர் கேரள மாநிலத்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திருச்சியில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அது நஷ்டம் ஏற்படவே சென்னையில் குடியேறினார்.

மாற்ற நினைத்தார்

அப்போது ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடிபெயர்ந்தார். குழந்தைகளின் படிப்புக்காக அங்கிருந்து தாம்பரத்துக்கு சென்றார். எனினும் அந்த ஆதம்பாக்கம் வீட்டை காலி செய்யாமல் அதை பெண்கள் விடுதியாக மாற்ற நினைத்தார்.

வெளியில் தங்கிய பெண்கள்

அதன்படி விளம்பரம் கொடுத்ததில் 9 பேர் வந்து தங்கியிருந்தனர். 3 படுக்கை அறைகள், 3 பாத்ரூம், டாய்லெட் கொண்ட இந்த வீட்டிற்கு தலா ரூ.7000 வசூல் செய்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் விடுதியில் சீரமைப்பு பணிகள் நடந்ததால் பெண்கள் வெளியில் தங்கிக் கொண்டனர். இந்த நேரத்தில்தான் 9 ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 2-ஆம் தேதி விடுதியில் தங்கியிருந்த பேராசிரியை ஒருவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போட ஒரு பிளக் பாயிண்டை பயன்படுத்தினார். அப்போது செல்போன் சார்ஜரின் பிளக் உள்ளே செல்லவில்லை.

செல்போன் பறிமுதல்

இதனால் அவர் பிளக் பாயிண்ட் கழற்றி சோதனை செய்த போதுதான் அங்கு ரகசிய கேமரா இருப்பது கண்டறியப்பட்டது. இவர் கொடுத்த தகவலின் பேரில் மற்ற பெண்களும் தங்களது செல்போனில் உள்ள செயலியை கொண்டு கண்டறிந்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சீவியிடம் லேப்டாப்கள், செல்போன்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

காட்சிகளும்

சஞ்சீவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் என்னுடைய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுடன் நன்கு பழகுவேன். விடுதியில் தங்கியுள்ள பெண்களை மிரட்டவே கேமராக்களை பொருத்தினேன். எனக்கு கேமராக்கள் குறித்து நன்றாக தெரியும். எனவே அதை பொருத்துவதில் எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. சஞ்சீவியின் செல்போனில் உடைமாற்றும் காட்சிகளும், கழிவறைக்கு செல்லும் காட்சிகளுமே இருக்கின்றன.

பரபரப்பு

எனினும் அவரது லேப்டாப்பில் உள்ள வீடியோக்களை பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய பெண்களும் சஞ்சீவியும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் உள்ளன. சஞ்சீவி மீது பெங்களூரிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. 2011- ஆம் ஆண்டு முதல் அவர் மீது வழக்குகள் உள்ளன. பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு பக்கத்தில் இருந்ததால் போக்குவரத்துக்கு வசதியாக பெண்கள் இங்கு தங்கிய நிலையில் இது வரை அங்கு அந்த விடுதி இயங்கி வந்ததே அப்பகுதியினருக்கு தெரியாதாம். ஆனால் தற்போது அந்த விடுதி குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.