இதுக்கும் விலை ஏற்றமா?.. கட்டிங், சேவிங் செய்ய ஜனவரியில் இருந்து புது கட்டணம்

சென்னை: ஜனவரியில் இருந்து முடி கட்டிங் ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், சேவிங் கட்டணம் 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை கோவிலம்பாக்கத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க முன்னேற்ற பேரவையின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், கடை வாடகை மற்றும் அழகு சாதன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என செலவு அதிகரித்துள்ளதால், முடித்திருத்தும் கட்டணம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதுவரை கட்டிங் மற்றும் சேவிங் கட்டணமாக ரூ.150 வாங்கப்பட்டது. தற்போது ரூ. 170 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், கட்டிங் 120 ( பழைய கட்டணம் 90), தாடி ஒதுக்குதல் ரூ.80 (60, 70), ஆயில் மசாஜ் ரூ.170 (130, 140), பிளீசிங் ரூ. 500 முதல் 1200, ஹேர் டை மட்டும் ரூ.170 (150) என்று உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கல்வி, வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையே, நெருப்பு கட்டிங், டிசைன் கட்டிங் என பல கட்டிங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டணங்கள் வித, விதமாக வாங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.