முறிந்து போன தென்னை மரங்கள்.. மனம் உடைந்த புதுக்கோட்டை தமிழரசி.. தீக்குளித்து தற்கொலை

புதுக்கோட்டை: தென்னை மரங்களை நம்பிதான் தன் கல்யாணமே இருந்தது!! அந்த மரங்கள் எல்லாமே சாய்ந்து போனதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கஜா புயலால் இன்னும் யாருமே மீளவில்லை. மூழ்கியும், அழுகியும், சாய்ந்தும், முறிந்தும் கிடக்கும் தென்னைகளை கண்டு மனம் பொறுக்க முடியாமல் தினமும் மாவட்டங்களிலிருந்து தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

விவசாயிகள் தற்கொலை வரிசையில் இன்று ஒரு விவசாயியின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் அதிர்ச்சியை கூட்டி உள்ளது.

விவசாய நிலம்

வடகாடு அருகே உள்ள கிராமம் வாணக்கன்காடு. இங்கு வசித்து வருபவர் அண்ணாதுரை. இவருக்கு ஒரு மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். சொந்தமாக 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தென்னை, தேக்கு என மரங்களை வைத்திருந்தார்.

திருமண ஏற்பாடு

இந்த மரங்களை வளர்த்துதான், தன் பிள்ளைகள் எல்லோருக்குமே கல்யாணம் செய்து வைத்தார் அண்ணாதுரை. ஆனால் கடைசி மகள் தமிழரசிக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவருக்கும் இந்த மரங்களை நம்பிதான் கல்யாணம் செய்ய முடிவு செய்திருந்தார் அண்ணாதுரை. அதற்காக கல்யாண வேலைகளையும் ஆரம்பித்திருந்தார்.

திருமணம் தடை

அப்போதுதான் கஜா வந்து எல்லாத்தையும் முறித்துபோட்டு சென்றது. இதனால் அண்ணாதுரை தோட்டத்து எல்லா மரங்களும் வேரோடு விழுந்தன. இதனால் குடும்பதே அதிர்ச்சியானது. அதிக அளவு இடிந்து போனது தமிழரசிதான். ஏனென்றால், திருமணம் தடையாகி விட்டதே என்று மட்டும் கிடையாது.

முறிந்த மரங்கள்

இந்த மரங்களை தன் சின்ன வயசில் இருந்தே வளர்த்தது தமிழரசியும்தான். அப்பாவுக்கு தோட்டத்தில் முழு நேரமும் கூடவே இருந்து உதவினார் தமிழரசி. அதனால்தான் முறிந்த மரங்களை பார்க்க தெம்பில்லாமல் கிடந்தார்.

கருகி இறந்தார்

தன் அப்பா, அம்மா வெளியில் சென்ற நேரம், தமிழரசி தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அலறல் சத்தம் அக்கம் பக்கம் எல்லோரும் ஓடிவந்தனர். ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடியும் தமிழரசி கருகி போய் உயிரிழந்தார். இது சம்பந்தமாக வடகாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனித பாசம்

தென்னைகளை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு பொருளாதார சூழல் கொல்கிறது என்றால், மரத்தின் மீது வைத்த மனித பாசம் இன்னொரு பக்கம் கொன்று எடுக்கிறது!!