என் சாவியை தரப்போறீங்களா இல்லையா? போலீசாருக்கு கெத்து மிரட்டல் விடுத்த ரமேஷ்

கரண்ட் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி: வர வர டிராபிக் போலீஸ்காரங்களை பார்த்தாலே சில பைக் ஆசாமிகள் ஏன்தான் இப்படி கடுப்பாகிறார்களோ தெரியவில்லை.

2 நாட்களுக்கு முன்னாடி கர்நாடகாவில் பைக்கில் வந்த வக்கீல் உட்பட 2 பேரை டிராபிக் போலீசார் வாயை ஊத சொன்னார்கள். அதற்கே அந்த போதை வக்கீல் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, அங்கிருந்த பானைகளை கொண்டு போலீசார் மண்டையை உடைத்து அட்டகாசம் செய்தார்கள்.

இந்நிலையில் நம்ம தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒரு அட்டகாசம் நடந்திருக்கு. ஆனால் அகிம்சை முறையில்தான்.. எந்த போலீசாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல்தான்!!

டிராபிக் போலீசார்

கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தினை சேர்ந்தவர் ஜோதி ரமேஷ். இவர் நேற்றிரவு தன் நண்பரை பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு மார்க்கெட் பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது டிராபிக் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.

ஆவணங்கள் எங்கே?

அந்த பக்கமாக வந்த ரமேஷின் பைக்கை நிறுத்தி, லைசென்ஸ் எங்கே என்று கேட்டனர். அதற்கு ரமேஷ் பதிலே சொல்லவில்லை. பிறகு ஆர்.பி. புக் எங்கே என்று கேட்டனர். அதற்கும் ரமேஷ் வாயை திறக்கவில்லை. மற்ற ஆவணங்கள் எல்லாம் எங்கே என்றனர். இதற்கும் முறையாக ரமேஷ் பதில் சொல்லவில்லை. இதனால் கோபமடைந்த போலீசார் ரமேஷின் பைக் சாவியை எடுத்து கொண்டனர். பிறகு, ஃபைன் கட்டுங்கள் என்றார்கள்.

சாவியை தரவில்லை

ஃபைன் கட்ட வேண்டும் என்று சொன்னவுடன் ரமேஷ் வாயை திறந்து சத்தம் போட்டு கத்த ஆரம்பித்தார். போலீசாருடன் கடுமையான வாக்குவாதம் நடத்தினார். யாரைக் கேட்டு என் பைக் சாவியை எடுத்தீங்க, ஒழுங்கா என் சாவியை குடுத்துடுங்க என்று கறாராக பேசினார். இப்படி தங்களிடம் மிரட்டும் தொனியில் பேசிய ரமேஷை போலீசார் அதிர்ந்து பார்த்தனர். ஆனால் சாவியை மட்டும் ரமேஷிடம் தரவே இல்லை.

நடுங்கி போன போலீஸ்

இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அங்கிருந்த கரண்ட் கம்பம் ஒன்றில் ஓடிப்போய் கடகடவென ஏறினார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினார். இதை கொஞ்சமும் எதிர்பாராத போலீசார் ஆடிப்போய் விட்டனர். என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். கரண்ட் கம்பத்தில் எங்கே ஷாக் அடித்து கீழே விழுந்து தொலைப்பாரோ என்று எல்லாருமே நடுங்கிவிட்டனர். எவ்வளவோ சொல்லி பார்த்தும் ரமேஷ் கீழே இறங்கவே இல்லை.

கரண்ட் கட்

இதனையடுத்து அந்த பகுதி மின்சார அதிகாரிகளிடம் பேசி, முதலில் அந்த பகுதியில் மின்சார இணைப்பை கட் பண்ணினார்கள். பிறகு மெதுவாக பேச்சு கொடுத்து, சமாதானமாகவே பேசி ரமேஷை ஒருவழியாக கீழே இறக்கினார்கள். கீழே ரமேஷ் இறங்கியதுதான் தாமதம்.. லபக்கென்று பிடித்துக் கொண்டு போலீஸ், விசாரணை நடத்தி பிறகு கைது செய்தார்கள். ரமேஷ் செய்த அமர்க்களத்தால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது.