திமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு!!

சென்னை: எம்எல்ஏ கருணாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று திடீரென சந்தித்தார்.

முக்குலத்தோர் படைத்தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த வாரம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நெல்லையில் இருந்து ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது செய்ய வந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்குப் பிறகு கருணாஸ் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்தார் கருணாஸ்.

ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு எம்எல்ஏ கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்தேன்.

என்னை ஸ்டாலினோ, டிடிவி தினகரனோ இயக்கவில்லை. என் மீது போடப்பட்ட வழக்கு பழிவாங்கும் நடவடிக்கை என மக்கள் கூறுகின்றனர்.

சபாநாயகர் என்பவர் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செயல்படவில்லை. இவ்வாறு கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.