கொழுக்குமலை தீ விபத்து நேற்று விவேக் இன்று திவ்யா பலியான புதுமண தம்பதியர்

கொழுக்குமலை பயணம்

ஈரோட்டிலிருந்து பிரபு , கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபிதா, சபிதாவுடைய மகள் நேகா, சித்தோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் , கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக், விவேக்கின் மனைவி திவ்யா, தமிழ்ச்செல்வன், கண்ணன் என மொத்தம் 8 பேர் கொழுக்குமலைக்கு மலையேற சென்றுள்ளனர்.

சந்தோஷ பயணம்

விவேக் மற்றும் திவ்யா ஆகிய இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்திருக்கிறது. விவேக் துபாயிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். அவரின் மனைவியான திவ்யா எம்.பில் முடித்துவிட்டு பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இறுதி பயணம்

திருமணம் முடிந்த உடன் துபாய் சென்று விட்ட விவேக், தனது மனைவியை அழைத்து செல்வதற்காக ஈரோடு வந்தார். அடுத்த மாதம் துபாய் செல்ல திட்டமிட்டிருந்த விவேக் இறுதியாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் குரங்கணி பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தார். திருமணமான 100வது நாளை கொண்டாடி விட்டு கொழுக்குமலைக்கு பயணம் சென்றவர்களுக்கு இறுதி பயணமாக மாறிவிட்டது.

தீயில் சிக்கிய புதுமண தம்பதியர்

ஞாயிறன்று மதிய நேரத்தில் பயணம் சென்றவர்களின் மொத்த மகிழ்ச்சியும் வடிந்து போனது. காரணம் தீ வடிவில் வந்த காலன்தான். விவேக் தான் முதலில் தீ நெருங்கி வந்ததைப் பார்த்துள்ளார். அதன் பின்பு காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியது. தனது நண்பனுடன் சேர்ந்து தீயில் இருந்து தனது மனைவியைக் காப்பாற்ற திவ்யாவை அணைத்த படி நீண்ட தூரம் அவர் ஓடினார். ஆனாலும் விவேக் கருகினார்.

கணவன் மரணம் அறியாத திவ்யா

தீ விபத்தில் விவேக், தமிழ் செல்வன் நேற்று உயிரிழந்தனர். திவ்யாவும், கண்ணனும் படுகாயங்களுடன்போராடி வந்தனர். திவ்யாவிற்கு 90 சதவிகித தீக்காயம் ஏற்பட்டது. சுயநினைவு இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யாவிற்கு கணவர் இறந்த செய்தி தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று திவ்யாவின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

பெற்றோர் கதறல்

தீ விபத்தில் விவேக் கருகி பலியான சம்பவம் கிடைத்ததும் கவுந்தப்பாடியில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.விவேக்கின் தந்தை பெயர் நடராஜன். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். சிறு வயது முதலே திவ்யாவும் விவேக்கும் நண்பர்களாக பழகி பின்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்களாம். திருமணம் முடிந்து 3 மாதம் கூட முடியாத நிலையில் தீயின் கோர நாக்கிற்கு இந்த தம்பதியர் பலியாகி விட்டனர்.