திருக்கோயிலூர் சிறுமிக்கு நினைவு திரும்பியது குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது

கடந்த மாதம் 21-ந்தேதி  திருக்கோவிலூர் அருகே  வெள்ளம்புதூர் ஆராயி (வயது 45). மகள் தனம் (15), மகன் சமயன் (8) ஆகியோர் இரவு வீட்டில் படுத்திருந்தபோது மர்ம நபர்கள் தாக்கினார்கள். தாக்குதல் நடைபெற்ற வீட்டிலேயே சமயன் உயிரிழந்தார். ஆராயி, தனம் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட நிலையில் சுயநினைவின்றி கிடந்தனர். இவர்கள்  படுகாயத்துடன் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் சுயநினைவு அற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் அவர்கள் சுயநினைவு திரும்பவில்லை. இதனால் அதிதீவிர பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுமி  தனம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் கண் விழித்து பார்த்தார். ஆனால் பேசமுடியவில்லை. இன்று அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு முழுமையாக சுய நினைவு திரும்பியது.

இன்னும் இரண்டு நாட்களில் நன்றாக பேசுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை சிக்காத குற்றவாளிகள் சிக்கும் வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. தாயார் ஆராயியும்  உடல்நிலையில்  சற்று முன்னேற்றம் அடைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை.

சிறுமிக்கு சுயநினைவு திரும்பியது குற்றவாளிகளை தேடி வரும் காவல்துறையினருக்கு பயனாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே இது இரண்டு சமூக பிரச்னையாக கருதப்பட்ட நிலையில் தற்போது உண்மை குற்றவாளி வெளியில் தெரியும் நேரம் வந்துள்ளது.