மீண்டும் தமிழகத்தில் கால் பதிக்க இருக்கும் நோக்கியா நிறுவனம் அமைச்சர் பரபரப்பு தகவல்

தமிழ்நாட்டில் மூடப்பட்ட நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று தகவல் தொழில்நுட்ப துறை மாநாட்டில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மணிகண்டன் கூறியதாவது: இந்த மாநாட்டில் டிஜிட்டல் இந்தியா குறித்தும், ஆதார் அட்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழகத்திற்கு பல்வேறு நலத் திட்டங்கள் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்று மணிகண்டன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், மின்னணு நிர்வாகம் மூலம் வரவேண்டிய நிதி நிறுத்தப்பட்டுள்ள தமிழகத்திலுள்ள சி.எஸ்.சி. சென்டர், டேட்டா சென்டர் மற்றும் ரெக்கவரி சென்டர்களுக்கு அந்த நிதியை உடனடியாக தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் தமிழகத்தில் எலக்ட்ரானிக் கிளஸ்டர் உருவாக்கி தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டு இருந்த நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதிலுள்ள பிரச்சனைகளை மத்திய அரசு சரி செய்தால் மீண்டும் அதனை திறக்கலாம் என்று கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்தும் பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் கூறினார்.

இம்மாநாட்டில் தமிழகத்தின் கோரிக்கைகளை ஏற்று சென்னைக்கு பின்டெக்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப சிறப்பு மையம் அளித்து இருக்கிறார்கள். சைபர் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் கேட்டுள்ளோம். எனவே அதற்கு, கணினி எமர்ஜென்சி ரெக்கவரி டீம் மூலம் உதவி செய்வதாக கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 14 துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளையுமே டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.