நெருங்கும் காதலர் தினம் உச்சத்தில் ரோஜா பூ விலை

நெல்லை: காதலர் தினம் நெருங்குவதால் ரோஜா பூ விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.

நாடு முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். புதிய காதலர்கள் தங்களது காதலை பரிமாறிக் கொள்வதும், ஏற்கனவே காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வதும், திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழும் காதலர்களும் இந்த விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது வழக்கம்.

இந்தாண்டு காதலர் தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக காதலர்கள் பரிசு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரோஜா பூக்கள் சந்தைக்கு கூடுதலாக வர தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஓசூர், ஊட்டி, கொடைக்கானல், தேன்கனிக் கோட்டை, பாகலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் பல வண்ண ரோஜா பூக்கள் காதலர் தினத்திற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சாதாரண சிவப்பு ரோஜா ஒரு கட்டிற்கு ரூ.40 என மாலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டில் 15 முதல் 20 ரோஜாக்கள் இருக்கும். இந்த பூக்கள் நடுத்தர காதலர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இவை நெல்லை உள்ளிட்ட பூ சந்தைக்கு அதிக அளவில் வந்துள்ளது. நாளை மறுநாள் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று முதல் அவை ரூ.200 முதல் ரூ.400 வரை விலை உயர்ந்து விட்டதால் காதலர்கள் திகைப்பில் உள்ளனர்.