மக்களே ஜாக்கிரதையா இருங்க இனி வெயில் கொளுத்தப் போகுது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்றும்,  இது வரை இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவ மழை முடிவடைந்து வெயில் காலம் தொடங்கியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவ மழை வழக்கம்போல் இந்த ஆண்டும் ஏமாற்றிவிட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் பெரும்பாலும் இந்த ஆண்டும் கடும் வறட்சியே நிலவி வருகிறது.

 

 

கடந்த டிசம்பரில் ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கி  கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருத்தாலும் அந்த மாவட்டத்திலும் தற்போது வறட்சியே நிலவுகிறது.

இந்நிலையில் தற்போது  மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரித்துக் காணப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், , 'சென்னையில் தற்போது மேகக்கூட்டங்கள் நிலவுவதால் குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு உயர்ந்துள்ளது.

வானிலையானது குளிர் காலத்திலிருந்து கோடை காலத்தை நோக்கி நகர்வதால், சூரியன் விரைவாகவே உதித்து வருகிறது.

அதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சில நேரங்களில் கடந்த ஆண்டுகளைவிட வெயில் மிக அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது