பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த நீதிமன்றம் இனி ஒருபயன் லஞ்சம் வாங்கமுடியாது

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது பாயத் தயாராகி வருகிறது, குண்டர் சட்டம்!
    
நம் நாட்டில் வாழும் சாமானிய மக்களுக்கு, அரசு மீதும், அரசியல்வாதிகள் மீதும் இருந்த நம்பிக்கை எப்போதோ போய் விட்டது என்பது, உள்ளங்கை நெல்லிக்கனியான விஷயம். அவர்களது, ஒரே நம்பிக்கை, நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் தான். 

நேர்மையான நீதிபதிகளால் தான், நாம் இன்னும் ஓரளவு நிம்மதியாக வாழ முடிகிறது. அதைச் சமீபத்திய சம்பவங்கள் உட்பட, பல சம்பவங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
    
இப்போது, இன்னும் ஒரு படி மேலே போய், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை, ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது? என்ற கேள்வியை, தமிழக அரசுக்கு முன் வைத்திருக்கிறது, உயர் நீதி மன்றம். 

அது மட்டுமல்ல. கடந்த பத்தாண்டுகளில், எத்தனை அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஓழிப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? எந்தெந்த துறைகளில், லஞ்சம் அதிகம் பெறப்படுகிறது, போன்ற விபரங்களை டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் அறிக்கையாகச் சமர்ப்பிக்கச் சொல்லி, உத்தரவிட்டுள்ளது. உயர் நீதி மன்றத்தின் இந்த நடவடிக்கையை தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்து வரவேற்கின்றனர்.

ஆசியக் கண்டத்திலேயே, அதிக லஞ்சம் பெறும், ஊழல் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது என்பதனையும் வேதனையுடன் மன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. பத்திரப்பதிவுத் துறையில் துவங்கி, அனைத்து அரசுத் துறைகளிலும், லஞ்சம் தலை விரித்தாடுகிறது. 

இன்ன வேளைக்கு இன்ன தொகை என்று, பட்டியலைக் கூட வாய் மொழியாகப் பரப்பி வருகின்றனர். அதனால் தான், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், அதற்கு, பொது மக்கள் ஆதரவு தருவதில்லை. “தெரிந்தவனுக்கு வேலையைக் கொடு, தெரியாதவனுக்கு சம்பளத்தைக் கொடு. அது தான் அரசு வேலை” என்ற வேதனையான பழமொழி கூட இருக்கிறது.


    

என்ன நடந்தாலும், அவர்களுக்கு, மாதம் முதல் தேதி பிறந்தால், சம்பளம் தவறாமல் வந்து விடும். அவர்கள் ஓய்வு பெறும் வயது வரை, அந்த வேலை நிரந்தரம் போன்ற காரணங்கள் தான், இந்த லஞ்சத்திற்கு முதல் காரணம். 

லஞ்சம் பெற்ற அரசு ஊழியர் கண்டுபிடிக்கப் பட்டாலும், அவர் தற்காலிக வேலை நீக்கம் தான் செய்யப் படுகிறார். பின்னர், அவரை வேறு ஊருக்கோ, வேறு துறைக்கோ மாற்றி விடுகின்றனர். இது தான் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை. 

ஒரு துறையில் லஞ்சம் வாங்கித் திளைத்தவர், அடுத்த துறைக்கு மாற்றப்படும் போது, அவரது சம்பள விகிதம் ஏதும் மாற்றப் படுவதில்லை. மேலும், தனது கை வரிசையை, அடுத்த துறையிலும் எப்படிக் காட்டலாம், என்ற யோசனையில் தான் அந்த ஊழியரின் செயல்பாடுகள் இருக்கின்றன.

இந்த மாதிரி லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவர்களது வேலையையும் நிரந்தரமாகப் பறித்தால் தான், அதைக் கண்டு மற்ற அரசு ஊழியர்கள் பயப்படுவார்கள். வாங்கும் சம்பளத்திற்கு, ஒழுங்காக வேலையைச் செய்யத் துவங்குவார்கள். 

இன்று எவ்வளவோ, எழுச்சியுடனும், நேர்மையான சிந்தனைகளுடனும் உள்ள இளைய தலைமுறை, இந்த அரசு உத்தியோகத்திற்காக, எத்தனை படித்து, எவ்வளவு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள், என்பதை அவர்கள் எழுதும், தேர்வு முடிவுகளே வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

அவர்களோடு ஒப்பிடும் போது, இப்போது லஞ்சத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களின் திறன் மிகக் குறைவாகத் தான் இருக்கிறது. அரசுத் துறைகளில் பணி புரியும் ஊழியர்கள், அந்தத் துறையைப் பற்றிய அறிவு எந்த அளவில் இருக்கிறது என்று தற்போது, சோதித்துப் பார்த்தால், 30 சதவீதம் கூட தேறாது. 

இது தான் உண்மை. அவர்களின் நோக்கம் எல்லாம், தங்களது சர்வீசுக்குள் எவ்வளவு சம்பாதிக்கலாம். தினம் வீட்டிற்குச் செல்லும் போது, எத்தனை ஆயிரம், பணம் தங்களது பாக்கெட்டில் இருக்க வேண்டும், என்ற டார்கெட் மட்டும் தான்.

எனவே, இந்த குண்டர் சட்டம் விரைவில் அரசு ஊழியர்கள் மீது பாய வேண்டும். இனியாவது, நம் நாட்டில் சுபிட்சம் பிறக்கட்டும்!

தமிழக அரசுக்கு இதை விடவும் ஒரு பெரிய கேவலம் வர போகிறதா..? கேரள முதல்வரை சந்தித்து உதவி கேட்கும் தூத்துக்குடி மீனவர்கள்..!!