பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை பிரமுகர்

தஞ்சை மாவட்டத்தில் நகை பறிப்பில் ஈடுபட்டு, ஏரியில் குதித்து தப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஞானப்பிரகாசம் நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மனைவி ராசாத்தியம்மாள். இவர்களது மகன் வினாயகம். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இவரது வீட்டில் நுழைந்த நான்கு பேர், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ராசாத்தியம்மாளின் கழுத்தில் இருந்த தாலி உட்பட 12 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு 4 பேரும் தப்பி ஓடினர்.

இதனால், பெரிதும் அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். அவருடைய  அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். பின்னர் வினாயகம் மற்றும் ஊர் மக்கள், மர்மநபர்களை விரட்டி சென்றனர்.

இந்த தகவலறிந்து தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கொள்ளையர்களை விரட்டினர். 

இதனால், மிகவும் பயந்துபோன அந்த 4 பேரும் ஆதி மாரியம்மன் கோவில் அருகேயுள்ள சமுத்திரம் ஏரியில் குதித்தனர். இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறை வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி தொடங்கியது.

கொள்ளையர்கள் ஏரியிலிருந்து தப்பிவிடாமலிருக்க ஏரியின் அனைத்துப் பக்கங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் ஆளில்லா குட்டி விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இதனை அடுத்து அந்த கொள்ளையர்களில் 3 பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், தஞ்சையை சேர்ந்த அறிவழகன், ராஜ்குமார், பிரகாஷ் என்று தெரிந்தது.

மேலும் விசாரணையில், இவர்களை வழிநடத்தும் தலைவன் வீரய்யன் என்றும் அவர் ஆவாரம்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் என்றும், வீரய்யன் மற்றும் 3 பேர் இதே போன்ற பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.

இதுபோலவே அவர்கள் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்துவிட்டு, கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பி வருவதாக கூறப்படுகிறது. 

அவர்களது கொள்ளை முயற்சியின்போது தடுப்பவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்குவது வீரய்யனின் வாடிக்கை என்று அவர்கள் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து வீரய்யனை , காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவமானபடுத்திய நபர்....