சென்னை வானில் தாளமுழக்கம்.. அடுத்து என்ன நிகழப்போகிறது..? வானிலை ஆய்வு மையம் விடுக்கும் எச்சரிக்கை..

மீண்டும் இரண்டாம் கட்ட வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி விட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு 11 மணி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தீவிரமான பருவமழை என்பது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியோடு நெருங்கிய தொடர்பு உடையது.

ஆதலால் மழை வந்தால் 4 நாட்கள் வரை நீடிக்கும். கடந்த முறை உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நமக்கு 9 நாட்கள் வரை மழையைக் கொடுத்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மழை இன்றி, ஒரு சின்ன இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியபின், 2-வது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இப்போது உருவாகி இருக்கிறது.

இது வட தமிழக கடற்கரைப்பகுதியான நாகை முதல் சென்னை பெரும்பாலான இடங்களில் மழையைக் கொடுக்கும்.

தென் மேற்கு வங்கக் கடல்பகுதியில் 2-வது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இது, அளவில் மிகப்பெரியதாக இருந்தபோதிலும், தீவிரம் குறைவாக இருக்கிறது. மிகப்பெரிய அளவில் மேகக்கூட்டங்கள் பரந்து கிடக்கின்றன.

நேற்று இரவு முதலே சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், ராயபுரம், கொடுங்கையூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும் கிண்டி, அடையாறு, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை வெளுக்கிறது.

இரவு முழுவதும் தொடர்ந்து இன்று காலை வரை கனமழையாகக் கொட்டித் தீர்த்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழையும், தாம்பரத்தில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன.

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு மேலும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து, இந்த 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

ஆத்தாடி! சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா?