இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா... பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு!

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அந்த நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26-ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரணில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார்.

எனினும் பெரும்பான்மை பலம் இல்லாத ராஜபக்சே எப்படி பிரதமராக முடியும் நான் தான் பிரதமர் என்று ரணில் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இலங்கை நாடாளுமன்ற பிரதமர் ராஜபக்சேவா ரணில் விக்ரமசிங்கேவா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை. ரணில் விக்ரமசிங்கே அலரி மாளிகையை விட்டு வெளியேற மறுத்து வரும் நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் ரணில் தான் பிரதமர் என்று கூறி வருகிறார்.

நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாடாளுமன்றத்தை 16-ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். பின்னர் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக நாடாளுமன்ற முடக்கத்தை திரும்பப் பெற்று நவம்பர் 14ல் நாடாளுமன்றம் கூடும் என அறிவித்தார்.

அன்றைய தினம் வழக்கம் போல நாடாளுமன்றத்தை கூட்டி அவை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க அதிபர் சிறிசேனா எண்ணுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சபாநாயகர் கரு ஜெயசூர்யா நடத்திய அதிகாரப்பூர்வமில்லாத ஆலோசனைக் கூட்டத்தில் நவம்பர் 14ல் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ராஜபக்சேவிற்கு 96 எம்பிகளின் ஆதரவு மட்டுமே இருக்கிறது, எம்.பிக்களை கட்சி தாவல் செய்ய குதிரை பேரங்களும் நடைபெற்று வருகின்றன. ரூ. 50 கோடி வரை எம்.பிகள் பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அமைச்சரவையில் இருந்து தொழிலாளர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை துணை அமைச்சராக இருந்து வந்த மனுஷா நாணயக்காரா பதவி விலகினார். அவர் அந்த அணியில் இருந்து விலகி, ரனில் விக்ரம சிங்கேயின் கட்சிக்கு தாவினார்.

அதிபர் சிறிசேனா தனது தரப்புக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக பகிரங்கமாக அறிவித்த நிலையில், துணை மந்திரி மனுஷா நாணயக்காரா விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இது மட்டுமின்றி, 15 எம்.பி.க்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது.

இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எம்.பி.க்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை அதிபர் சிறிசேனா நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக ஏற்கனவே தீர்மானித்து விட்டதையும், அதில் இருந்து மாறப்போவதில்லை என்பதையும் சிறிசேனாவிடம் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தற்போதைய சூழலில் இலங்கை அரசியல் நகர்வுகள் அனைத்துமே ராஜபக்சேவிற்கு எதிராகவே உள்ளது எனவே வாக்கெடுப்பு நடத்தினால் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவானது. எனவே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்தி விடலாம் என அதிபர் சிறிசேனா முடிவு எடுத்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக வெளியான செய்திகள் இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. 2020ல் தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்,அதன் பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் திடீரென வெளியான இந்த தகவலால் அடுத்து என்ன என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் மக்கள். ஆனால், இலங்கை அரசு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் கலைப்பு என வெளியான செய்தி முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.