நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக வாக்கு.. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிரடி முடிவு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, அந்த நாட்டு அதிபர் சிறிசேனா திடீரென நீக்கிவிட்டு, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார்.

இதனை ஏற்க ரணில் விக்ரமசிங்கே மறுத்தார். பெரும்பான்மை பலம் கொண்ட நானே, பிரதமராக தொடருகிறேன் என்று அறிவித்து பதவி விலக மறுத்தார்.

இலங்கை அரசியல் சாசனம்

ரணில் தரப்பை முடக்கவும், ராஜபக்சே தனது ஆதரவை அதிகரித்துக்கொள்ள வழி செய்யவும் உதவும் வகையில், நாடாளுமன்றத்தை வரும் 17ம் தேதிவரை முடக்கி சிறிசேனா உத்தரவிட்டார். இலங்கை அரசியல் சாசனத்தின் 19வது திருத்தத்திற்கு எதிராக பிரதமர் ரணில் நீக்கம் செய்யப்பட்டதற்கும், நாடாளுமன்றம் முடக்கம் செய்யப்பட்டதற்கும், உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழ்நிலைகளால், இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

சபாநாயகர் எதிர்ப்பு

இதனிடையே, அதிரடி திருப்பமாக, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவி பறிக்கப்பட்டதற்கு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நாடாளுமன்ற முடக்கத்தை திரும்பப் பெற்ற அதிபர், நாடாளுமன்றத்தை வரும் புதன்கிழமை கூட்ட உத்தரவிட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

அடுத்த திருப்பமாக, இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின், ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுடன் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஆலோசனை நடத்தினார். அப்போது ராஜபக்சேவிற்கு எதிராக 119 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் சபாநாயகரிடம் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்டது இலங்கை நாடாளுமன்றம். ராஜபக்சே கூட்டணிக்கு 96 பேரும், ரணில் கட்சி கூட்டணிக்கு ஆதரவாக 106 பேரும் உள்ளனர். ஆட்சி அமைக்க, 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில், 16 எம்.பி.க்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அவசியமாகும்.

தமிழ் தேசிய கூடடமைப்பு அறிவிப்பு

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் ராஜபக்சே உள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை இன்று அறிவித்துள்ளது. அதன்படி சட்ட விரோதமாக ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேரத்தில் நடுநிலை வகித்தல் என்பது அராஜக வெற்றியை ஈட்டுவதற்கு வழிவகுக்கும் என்பதால், ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி. வியாழேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து, கிழக்கு மாகாண மேம்பாட்டு துறை துணை அமைச்சராக, வியாழேந்திரனை, ராஜபக்சே நியமித்துள்ளார். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் இப்போது 15ஆக உள்ளது. இது பெரிய அளவிலான எண்ணிக்கையாகும். எனவே, கோல்மால்கள் நடுவே நடக்காமல் இருந்தால், ராஜபக்சேவின் பிரதமர் பதவி பறிபோவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

பணம், பதவி லஞ்சம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதை பாருங்கள்: பிரதமரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. இந்த அதிகாரம் 19வது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே பிரதமரை நீக்குவதாக வெளிட்ட வர்தமானி அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது. மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக அறிவித்துவிட்டு, பெரும்பான்மையை அவர் நிரூபிப்பதற்கு வேண்டிய தேவையை தாமதிக்கவே கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த காலநீட்டிப்பைப் பயன்படுத்தி, அமைச்சர் பதவிகளையும் பணத்தையும் லஞ்சமமாகக் கொடுத்து தனது பக்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை. தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இந்த சதிக்கு பலியானது கடுமையான கண்டனத்திற்கு உரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறோம்.

நடுநிலை கூடாது

மஹிந்த ராஜபக்சே அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும். இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டக்கூடிய ஜனநாயக விரோத செயல். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கையில் தற்போது எழுந்துள்ள சூழல் குறித்து முடிவெடுக்க கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று மாலையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.