தமிழ் தேசிய கூட்டணியை உடைத்தார் ராஜபக்சே.. ஆதரவு அளித்த எம்.பி.க்கு அமைச்சர் பதவி

கொழும்பு: இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள, மகிந்தா ராஜபக்சேவிற்கு தமிழ் எம்.பி ஒருவர் ஆதரவு அளிக்க முன் வந்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவியை பறித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால், மகிந்தா ராஜபக்சேவிற்கு போதிய எம்.பிக்கள் ஆதரவு இல்லை. எனவே அங்கு குதிரை பேரம் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டணி எம்.பி. எஸ்.விளந்திரியன் அணி தாவியுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு 
வெற்றிக்கு அவசியம்

16 எம்.பி.க்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆதரவு ராஜபக்சே, அல்லது ரணில் வெற்றிக்கு மிகுந்த அவசியம் என்ற நிலையில், அந்த கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றபோதிலும், ராஜபக்ஷேவிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது.

 

சம்மந்தன் 
நிபந்தனைகள்

ஒருவேளை அப்படி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றால், தமிழர்கள் பகுதிக்கு தர வேண்டிய, உரிமைகளை நிபந்தனையாக கேட்பது, ஐ.நா. தீர்மானத்தில் கூறப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. சமீபத்தில் ராஜபக்சே, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனிடம் ஆதரவு கேட்டபோது, அவர் பிடிகொடுக்காமல் வந்துவிட்டார்.

 

அந்த பக்கம் 
எஸ்கேப்பான எம்.பி

இந்த நிலையில், ராஜபக்சே ஆசை வார்த்தை கூறி, தமிழ் தேசிய கூட்டணியில் ஒரு எம்.பியை இழுந்துள்ளார். எம்.பி. விளந்திரியன், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிழக்கு மாகாண மேம்பாட்டு துறை துணை அமைச்சராக, விளந்திரியனை, ராஜபக்சே நியமித்துள்ளார்.

 

ராஜபக்சே திட்டம் 
ஆசை வார்த்தை

இப்படி அமைச்சர் பதவி தருவது, இன்ன பிற விஷயங்களை கவனிப்பது என தமிழர் கட்சி கூட்டணியை உடைக்கும் வேலையில் ராஜபக்சே இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 225 எம்.பி.,க்களில், ராஜபக்சே கூட்டணிக்கு 96 பேரும், ரணில் கட்சி கூட்டணிக்கு ஆதரவாக 106 பேரும் உள்ளனர். ஆட்சி அமைக்க, 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அவசியமாகும்