ரணில் மீண்டும் பிரதமரானால் அதிபராக இருக்க மாட்டேன்... சிறிசேனா தடாலடி!

கொழும்பு: ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமரானால் தான் ஒரு மணி நேரம் கூட அதிபராக இருக்க மாட்டேன் என்று மைத்ரிபால சிறிசேனா பேசி இருப்பது இலங்கை அரசியல் சூட்டை அதிகரித்துள்ளது.

இலங்கையில் பிரதமரை அதிரடியாக மாற்றிய அதிபர் சிறிசேனாவால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார் என்பதிலேயே அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் இருக்கின்றன. இந்நிலையில் அதிபர் சிறிசேனாவின் அதிரடி பேச்சு அரசியல் சூட்டை மேலும் கிளப்பியுள்ளது.

இலங்கை சுதந்திர கட்சியின் தேர்தல் நிர்வாகிகள் கூட்டத்தில் அதிபர் சிறிசேனா பேசினார். அப்போது வடக்கையும், கிழக்கையும் இணைக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு பல அமைப்புகள் முட்டுக்கட்டைப் போட்டது என்றும் கூட்டாட்சி மாநிலத்தை ஏற்படுத்த தடை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

2 தைரியமான முடிவுகள்

ஜனவரி 8, 2015 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது தான் மிக தைரியமான ஒரு முடிவை எடுத்ததாகவும் இன்று தான் எடுத்துள்ள முடிவு அதைவிட மிகவும் தைரியமானது மற்றும் நாட்டின் நலனுக்காகவே இதனை செய்ததாகவும் சிறிசேனா கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்ற பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ஒரு கடிதம் அளித்ததாகவும் அதில் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் சிறிசேனா குறிப்பிட்டார்.

அதிபரின் அதிகாரத்தை கேட்டனர்

அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்த மற்றொரு அதிர்ச்சியளிக்கும் விஷயம் அதிபருக்கு இருக்கும் சில அதிகாரங்களை பிரதமருக்கு மாற்றி கையெழுத்திடவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். விக்ரமசிங்கே பிரதமராக்க படுவார் ஆனால் அதிபருக்கான அதிகாரங்கள் எதுவும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்று தான் பதில் அளித்ததாகவும் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

புதிய அரசு உருவாகியுள்ளது

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரணில் விக்ரமசிங்கேவிற்கும் தமக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் ஏராளமாக இருந்ததாகவும் சிறிசேனா கூறியுள்ளார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்ற பின்னர் புதிய அரசை உருவாக்க நினைத்ததாக குறிப்பிட்ட சிறிசேனா, தம்மை படு கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இணைந்தே முடிவுகள்

தற்போது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ராஜபக்சேவால் எந்த முடிவையும் எடுக்க முடியாது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இருவரும் இணைந்து முடிவுகளை எடுப்போம். அதிபரும், பிரதமரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளே நாட்டின் எதிர்காலத்தை ஸ்திரமானதாக வடிவமைக்கும்.

அதிபர் பதவியில் இருக்க மாட்டேன்

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலைமைகள் பற்றி கவலைப்படாமல் உங்களது பணியில் நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும் என்று சிறீசேனா கூறினார். ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமரானால் ஒரு மணிநேரம்கூட தான் அதிபராக பதவியில் இருக்க மாட்டேன் என்றும் கூட்டத்தினர் மத்தியில் சிறிசேனா கூறியுள்ளது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது