ரணிலுக்கே எங்கள் ஆதரவு... ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்திய யூஎன்பி!

கொழும்பு : இலங்கையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லிபர்ட்டி ரவுன்டபவட் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்றைய தினம் ராஜபக்சே பிரதமருக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத போதும் சிறிசேனா ராஜபக்ஷவை பிரதமராக அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில் அவரை பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று அந்தக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள லிபர்டி ரவுண்டபவட் அருகே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எந்த நிலையிலும் தங்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவிற்கு என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.