மக்கள் மீது சரமாரியாக சுட்ட இலங்கை அமைச்சரின் பாதுகாவலர்கள்.. ஒருவர் பலி.. திடுக் காரணம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகி உள்ளார்.

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகி உள்ளார்.

இலங்கையில் தற்போது உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு யார் பிரதமர் என்று அரசு அதிகாரிகளுக்கே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

யார் இவர்

அர்ஜுனா ரணதுங்கா பெட்ரோலிய துறை அமைச்சராக உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜுனா இலங்கையில் மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவர். அமைச்சர் ரணதுங்கா நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு செய்தார்

நேற்று மாலை அர்ஜுனா ரணதுங்கா கொழும்பின் டிமாடகோடாவில் உள்ள சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில ஆவணங்களை எடுக்க அவரது பாதுகாலவர்களுடன் சென்றுள்ளார். சில முக்கிய ஆவணங்கள் அங்கு இருந்துள்ளது. அதை எடுப்பதற்காக மூன்று பாதுகாலவர்களுடன் சென்றுள்ளார்.

சச்சரவு

ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் அமைச்சருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்களை ஆவணங்களை எடுக்க விடாமல் அங்கிருந்தோர் தடுத்து இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலானது. வாய் தகராறு சண்டையாக உருவெடுத்தது.

துப்பாக்கியால் சுட்டனர்

யாரும் நினைக்காத சமயத்தில் அமைச்சரின் பாதுகாவலர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். அங்கு இருந்த மக்களை நோக்கி நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மக்கள் வேகமாக வேறு திசையில் ஓடினார்கள். ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்தது.

பிணையில் எடுக்க முயன்றனர்

இந்த நிலையில் இது குறித்து புதிய தகவல்கள் வந்துள்ளது. அதன்படி அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவை அங்கிருந்து மக்கள் பிடித்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அரசியல் குழப்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை பிடித்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அமைச்சரை மக்கள் சூழ்ந்து கொண்டு சுற்றி வளைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

பலியானார்

இந்த துப்பாக்கி சூடு காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் அந்த பெட்ரோலிய நிறுவன ஊழியர் பலியானார். இதில் 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ரணதுங்காவின் மெய்க்காப்பாளர்கள் நேற்றே கைது செய்யப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.