இலங்கை அரசியலில் புயல்.. கொழும்பில் ராணுவம் குவிப்பு.. ராஜபக்சே இன்று பிரதமராக பதவியேற்பு?

கொழும்பு : இலங்கையில் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்ஷே அப்பதவியை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கொழும்பு நகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இது தீவிரமடைந்த நிலையில் சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கிவிட்டார். அப்பதவிக்கு ராஜபக்ஷேவை நியமித்தார். மேலும் பதவிப்பிரமாணமும் செய்து வைத்துவிட்டார்.

இதற்கு ரணில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள தன்னை சிறிசேனா எப்படி நீக்கலாம் என ரணில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நானே பிரதமர் என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு ரத்து

இதனிடையே நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ரணில் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்குள் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் 16ஆம் தேதி வரை முடக்கினார் சிறிசேனா. இதைத் தொடர்ந்து ரணிலுக்கான பாதுகாப்பை ரத்து செய்துவிட்டார்.

தீவிரம்

அவரது செயலாளரை நீக்கிவிட்டார். மேலும் பிரதமர் இல்லத்திலிருந்து ரணில் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிட்டுள்ளார் சிறிசேனா. இந்த நிலையில் ராஜபக்ஷே இன்று பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தன.

தேர்தல்

இந்நிலையில் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனென்றால் அவர் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நல்ல நிர்வாகத்திற்காகவும் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மக்கள் தேர்வு

அவருக்கு எதிராக இன்னொருவர் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ரனில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டதும் ஏற்கக்கூடியது அல்ல. பிரதமருக்கான சலுகைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். அதற்கான அத்தனை உரிமைகளும் அவருக்கு உண்டு. மேலும் நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பது என்றால் சபாநாயகரான என்னுடன் நீங்கள் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். இதுபோன்ற முடக்கம் நாட்டில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

கோரிக்கை

எனவே, உங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். நாடாளுமன்றத்தை முடக்கும் விவகாரத்தை பொறுத்தவரை, சபாநாயகருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே அதுதொடர்பான முடிவுகளை நீங்கள் எடுக்க முடியும் என்பதை இந்த நேரத்தில் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கொழும்புவில் ராணுவம் குவிப்பு

அதிபர் சிறிசேனா-ரணில் ஆகியோருக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்போது, சிறிசேனாவுக்கு எதிராக சபாநாயகர் போர்க்கொடி உயர்த்தி இருப்பது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் கொழும்பு நகரிலும், நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.