பிரதமராக நீடிப்பவர் யார்?... ராஜபட்சவா? ரணிலா?.. முடிவு இலங்கை தமிழ் அரசு கட்சியின் கையில்!

கொழும்பு: பிரதமராக நீடிக்கவுள்ளது ராஜபட்சவா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா என்பது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கையில் உள்ளது.

இலங்கையில் நேற்று யாரும் எதிர்பாராத அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. பெரும்பான்மையே இல்லாத சிறிசேனா, பெரும்பான்மை பலம் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு ராஜபட்சவை பிரதமராக அறிவித்தார்.

இது உலக தமிழர்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியது. பிரதமராக பதவியேற்ற ராஜபட்ச மெல்ல மெல்ல ஆட்சியையும் தன் கைக்குள் கொண்டு வந்துவிடுவார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

ரணில் கட்சி

இலங்கையை பொருத்தவரை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிதான் இலங்கை நாடாளுமன்றத்தில் தனி பெரும் கட்சியாகும். பெரும்பான்மை பலம் இல்லாததால் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது ரணில் கட்சி.

நாட்டின் பிரதமராக

தற்போது இந்த கூட்டணி உடைந்துவிட்ட நிலையில் பெரும்பான்மை பலத்தையும் சிறிசேனா கட்சி இழந்துவிட்டது. இந்நிலையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பவரே நாட்டின் பிரதமராக முடியும். அந்த வகையில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 பேரும், சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 95 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 16 பேரும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 6 பேரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒருவரும் என உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை ரணிலுக்கு கொடுத்துள்ளது

யாருக்கு ஆதரவு

அதுபோல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை ராஜபட்சவுக்கு அளித்துள்ளது. இந்த கட்சிக்கு 2 எம்பிக்கள் உள்ளனர். ஈழ மக்களின் குடியரசு கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் டக்ளஸ் தேவானந்தா தனது ஆதரவை ராஜபட்சவுக்கு அளித்துள்ளார். இந்தக் கட்சியின் உறுப்பினர் பலம் ஒன்று. இந்த நிலையில் அதிக உறுப்பினர்களை கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

16 எம்பிக்கள்

16 எம்பிக்களை கொண்ட இந்த கட்சியின் முடிவை பொருத்தே இலங்கை பிரதமர் யார் என்பது தெரியவரும். இந்த கட்சி ராஜபட்சவுக்கு ஆதரவளித்தால் அவர்தான் பிரதமராக இருப்பார். ரணிலுக்கு ஆதரவளித்தால் இவரே பிரதமராக தொடர்வார். எனவே இந்த கட்சியின் நிலைப்பாட்டை பொருத்தே இலங்கை அரசியல் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.