மெஜாரிட்டி பலத்தோடு இருக்கும் ரணில்... நம்பிக்கையை தகர்க்க காய் நகர்த்தும் சிறிசேனா!

கொழும்பு : நாடாளுமன்றத்தை எப்போது கூட்டினாலும் தனக்கே பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிப்பேன் என்று நம்பிக்கையோடு ரணில் விக்ரமசிங்கே இருந்து வருகிறார். ஆனால் அவரது நம்பிக்கையை தவிடுபொடியாக்கும் விதமாக நாடாளுமன்றத்தை முடக்கி அரசியல் பரபரப்பில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளார் சிறிசேனா.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டதை அடுத்து புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். ரணில் கட்சியுடனான கூட்டணியை முறித்து கொண்டு ராஜபக்சேவுடன் கூட்டணி அமைத்து இந்த திடீர் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் அதிபர் சிறிசேனா. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனாரத்னா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரின் அலுவல்களையும் நிறுத்திவைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 16ம் தேதி வரை இந்த தற்காலிக முடக்கம் தொடரும் என தெரிகிறது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தான்தான் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டினாலும் பெரும்பான்மையை நிரூபிக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்ததையடுத்து சிறிசேனா நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவியை அளித்ததன் மூலம் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அதிபருக்கே உள்ளது அந்த அதிகாரத்தை பயன்படுத்திய சிறிசேனா ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். இதனிடையே ராஜபக்சேவிற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் தற்காலிகமாக பாராளுமன்றத்தை முடக்கியுள்ளார் அதிபர் சிறிசேனா.

நவம்பர் 5ம் தேதி முதல் இலங்கை பட்ஜெட் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் திடீர் திருப்பமாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதால் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. மற்றொரு புறம் இந்த கால இடைவெளியில் ரணில் கட்சியில் இருந்து எம்பிகளை விலைபேசும் விஷயங்களும் நடக்கலாம் என்றும் ராஜபக்சேவிற்கு ஆதரவாகவே சிறிசேனா நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.