சு.சாமி இலங்கை பயணம், ராஜபக்சே இந்திய பயணத்திற்கிடையே நடந்தது என்ன...

சென்னை : இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவியேற்று அதிகார மையத்திற்கு வந்துள்ளது பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் என்று திருமாவளவன், கவுதமன் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜபக்சே பொறுப்பேற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இனப்படுகொலை செய்த ராஜபக்சே பிரதமராகி இருப்பது பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியலில் நிகழ்ந்துள்ள மாற்றம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்சே பிரதமர் ஆகி இருக்கிறார் இலங்கை அரசியலில் இந்திய அரசின் தலையீடு தான் இந்த அரசியல் மாற்றத்திற்குக் காரணம். அதிபர் மைத்ரிபால சிறிசேனா தன்னுடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ராஜபக்சே பதவியேற்றிருப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர் கவுதமன் கூறுகையில், தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே இலங்கையின் பிரதமராக அதிகார வர்க்கத்தால் பொறுப்பிற்கு வந்துள்ளார். அன்று நடந்த படுகொலையை விட இது மோசமான ஜனநாயகப் படுகொலை. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி 1 மாதத்திற்கு முன்னர் இலங்கை சென்று வந்தார், சமீபத்தில் ராஜபக்சே இந்தியா வந்தார். இதனைத் தொடர்ந்தே பதவியேற்பு நடந்துள்ளது. இந்த 2 சந்திப்புகளுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதே எங்களுக்கு இருக்கும் சந்தேகம்.

 

ஐநாவில் 9 ஆண்டுகளாக இனப்படுகொலைக்கு எதிராக ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ராஜபக்சேவின் பதவியேற்பு நடந்துள்ளது. இதனால் இனியும் இனப்படுகொலை விவகாரத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக ஒரு தீர்வு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா பக்கம் தலையையும், சீனாவின் பக்கம் வாலையும் வைத்துள்ள ராஜபக்சேவால் இந்தியாவிற்கு எப்போதும் ஆபத்து தான் என்றும் கவுதனம் எச்சரித்துள்ளார். ராஜபக்சேவுடனான தொடர்பை இந்தியா துண்டிப்பதே நல்லது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.