4 ஆண்டுகளில் அரசியல் பகையாளியே கூட்டாளியான கதை... அதிர்ச்சியில் இலங்கை மக்கள்!

கொழும்பு : கடந்த 2014ல் யாரை வீழ்த்தி அதிபர் பதவிக்கு மைத்ரிபால சிறிசேனா வந்தாரோ 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ராஜபக்சேவிற்காக ரணில் விக்ரமசிங்கேவை பதவிநீக்கம் செய்து மஹிந்தாவை பிரதமராக்கி இருப்பது இலங்கை மக்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2015 இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை எதிர்க்கட்சிகளான முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கா மற்றும் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட அறிவிப்பு இலங்கைத் தீவின் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து மைத்ரிபால சிறிசேனா களமிறங்குவார் என்ற அறிவிப்பு தான் அது.

இலங்கை மக்களை இந்த முடிவு ஸ்தம்பிக்கச் செய்தது. ராஜகப்சே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் சிறிசேனா. அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சரவையில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். சிறிசேனாவின் இந்த அதிரடி முடிவு குமாரதுங்கா, விக்ரமசிங்கே 3 பேரும் எடுத்த துணிவான முடிவாகவே பார்க்கப்பட்டது.

தோல்வியை பரிசளித்த சிறிசேனா

சிறிசேனாவின் அந்த அதிரடி மாற்றம் அரங்கேறும் நாள் வரை தன்னை விட பதவியில் குறைந்த இடத்தில் இருக்கும் சிறிசேனா தன்னை எதிர்ப்பார் என்றோ, அதிபர் தேர்தலில் தன்னை வீழ்த்தி வெற்றி காண்பார் என்றோ ராஜபக்சே நினைத்திருக்கவில்லை. அதிபர் தேர்தலில் ராஜபக்சேவிற்கு தோல்வியை பரிசாகத் தந்தார் சிறிசேனா. தன்னுடைய அதிகாரம், ராணுவம் மற்றும் காவல்துறை பலத்தை ராஜபக்சே பயன்படுத்திய போதும் தோல்வியே கிட்டியது. இதனால் ராஜகப்சேவின் அரசியல் சகாப்தம் முடிந்தது என்றே பலரும் கருதினர்.

சிறிசேனா, ரணில் கூட்டணி

அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்ததையடுத்து சிறிசேனா அதிபராக பொறுப்பேற்றார். சில மாதங்களிலேயே இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியும், இலங்கை சுதந்திர கட்சியும் கூட்டணி அமைத்து சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே தலைமையில் ஒருங்கிணைந்த தேசிய அரசை அமைத்தனர். ஆனால் இந்த கூட்டணி அரசு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

மக்கள் சுதந்திரமாக உணர்ந்தனர்

முதல் இரண்டு ஆண்டுகள் இரண்டு தலைவர்களிடையேயும் நல்உறவு இருந்தது. இலங்கை மக்களும் ஜனநாயகத்தை உணரத் தொடங்கினர். ஊடகங்கள், மக்கள், பிரதிநிதிகள் என அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக உணர்ந்தனர். ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுபட்ட நிம்மதியும அவர்களிடம் இருந்தது.

விரிசல் ஏற்படுத்திய ராஜபக்சே

2017ம் ஆண்டு தொடக்கத்தில் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. ராஜபக்சே மற்றும் அவருக்கு நெருக்கமான எம்பிகள் கலகத்திற்கு கொள்ளி கொளுத்தத் தொடங்கினர். சிறிசேனா மற்றும் விக்ரமசிங்கே இடையே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டது. அண்டை நாடுகளான இந்தியா, இடையேயான நட்பை கையாள்வதில் தான் இருவருக்கும் அதிக வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கூட்டணி பூசல்கள் பற்றி இருவருமே பொதுவெளியிலும் பேசத் தொடங்கினர்.

ராஜபக்சே முயற்சி வெற்றி

சிறிசேனா, ரணில் இடையேயான விரிசல் அதிகமானது ராஜபக்சேவிற்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. இருவரிடையே மூட்டிய கலகம் வெற்றி கண்டது. ஆனால் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவை பதவிநீக்கம் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தன்னுடைய சொந்த வாழ்வு, அரசியலில் ரில்ஸ் எடுத்தே ரணில் சிசிசேனாவை அதிபராக்கினார்.

ஆட்டிவைத்த ராஜபக்சே

ராஜபக்சேவின் தூண்டுதல் பேரிலேயே அண்மைக் காலமாக சிறிசேனா ரணிலுக்கு எதிராக சில அறிக்கைகளை வெளியிட்டார் என்று கொழும்பு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் ரா அமைப்பு தன்னை கொல் சதி திடடம் தீட்டியுள்ளதாக சிறிசேனா கூறியதற்கும் இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது. சிறிசேனாவின் புத்த மத பிரியத்தை துருப்புச் சீட்டாக வைத்து மெல்ல மெல்ல தன்வசம் ராஜபக்சே சிறிசேனாவை இழுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

தலைவர்கள் நம்பி இருந்தனர்

இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது விக்ரமசிங்கே அதிபர் பதவிக்கு சிறிசேனாவே சரியான பொருத்தம் என்று கூறி இருந்தார். ராஜபக்சே வீழ்த்துவதற்கு முன்னர் அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்காவும் சிறிசேனா மீது மிகுந்த நம்பிக்கை தெரிவித்திருந்தார். 2014-15 காலகட்டத்தில் இலங்கையையும் அண்டை நாடுகளையும் எப்படி சிறிசேனா அதிர்ச்சியில் ஆழ்த்தினாரோ, அதையே தற்போது ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ளார்.

நெருக்கடி உருவாகும்

2014 டிசம்பர் வரை சிறிசேனா ராஜகப்சேவை வீழ்த்துவார் என்று யாருமே நினைக்கவிவ்லை. ஆனால் அவர் அதை செய்து காட்டினார். நேற்று வரை சிறிசேனா விக்ரமசிங்கேவிற்கு எதிராக நடக்க மாட்டார் என்ற நினைப்பையும் அவர் தவிடுபொடியாக்கியுள்ளார். ரணில் பதவிநீக்கம் செய்யப்பட்டாலும் தன்னை நீக்கியது செல்லாது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அவர் கூறி வருகிறார். இலங்கையில் எப்போது வேண்டுமானால் அரசமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

நண்பனான பகையாளி

எதையும் யோசிக்காமல் சிறிசேனா எடுத்த முடிவு அவர் மீதும், இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் பார்வையிலும் சேதாரத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இலங்கையில் இருந்த யாருமே நடுநிலையாக இருந்த அரசியல்வாதி ஒருவர் சந்தர்ப்பவாதியாக மாறி இருப்பதை எதிர்பார்க்கவில்லை. அதிலும் யாரை வீழ்த்தி அதிபர் பதவிக்கு வந்தாரோ அவருடனேயே மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளார் சிறிசேனா.