ஏப் 4 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் இலங்கை பிரதமராக நீடிப்பாரா ரணில்

கொழும்பு; இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தில் எதிர்கட்சி கூட்டணியில் உள்ள 51 உறுப்பினர்களும், அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திரா கட்சியின் 4 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சியினர் கூட்டாக சபாநாயகரிடம் அளித்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த தீர்மானத்தில் கையெழுத்து போடவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது நடைபெறும் வாக்கெடுப்பை புறக்கணிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. 

பிரதமர் மற்றும் அரசு ஆகியவற்றுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்கட்சியினர் கூறியுள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் தற்போது வரை மொத்தம் 47 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 தீர்மானங்கள் அரசுகளுக்கு எதிரானவை ஆகும். பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் ஏப்ரல் 4 அன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இதன் மீதான விவாதத்திற்கு பிறகு நடைபெறும் வாக்கெடுப்பின் முடிவில் இலங்கை பிரதமர் பதவியை ரணில் தக்கவைப்பாரா அல்லது பறிகொடுப்பாரா என்பது தெரிய வரும். 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ