இலங்கையில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை ஐ நா சபை வலியுறுத்தல்

இலங்கையில் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கட்டாய மதமாற்றம் செய்வதாக கடந்த மாதம் 27ம் தேதி இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் சிங்களர்கள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமிய சமூகத்தினரும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.

இதனிடையே இந்த மோதலில் சிங்களர் ஒருவர் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள அமைப்பினர், இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்தும், வீடுகள் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் கண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.